கடந்த 2022ம் ஆண்டில் வெளியான காந்தாரா படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இப்போது காந்தாரா சாப்டர் 1 என்ற படம் உருவாகி உள்ளது. வருகிற 2ம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. குறிப்பாக 30க்கும் மேற்பட்ட நாடுகளில் காந்தாரா சாப்டர் 1 படத்தை திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி டைரக்ட் செய்து அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் காந்தாரா சாப்டர் 1 படத்தின் பிரமோசன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் இன்று சென்னையில் நடப்பதாக இருந்த இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே பிலிம்ஸ் அறிவித்து விட்டது. கரூர் துயர சம்பவம் காரணமாக இந்த நிகழ்ச்சியை நடத்தவில்லை என்று கூறியுள்ளது.
ஆனால் உண்மையில் காந்தாரா சாப்டர் 1 பிரமோசன் நிகழ்ச்சியை சென்னையி்ல இன்று நடக்காமல் தவிர்க்க காரணம் ஆந்திராவில் நடந்த ஒரு பிரச்னை என்று தெரிய வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் காந்தாரா சாப்டர் 1 படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி நடந்தது. இதில் படத்தின் நாயகன் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி பங்கேற்று பேசினார்.
தெலுங்கு ரசிகர்கள் திரண்டிருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் அவர் கன்னட மொழியில் பேசியிருக்கிறார். அது அவரது தாய்மொழி மற்றும் தெலுங்கு மொழி அவருக்கு தெரியாததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அந்த விழாவில் பேசிய ரிஷப் ஷெட்டி, எனக்கு தெலுங்கு அவ்வளவாக தெரியாது. வேண்டும் என்றால் நான் கன்னடத்தில் பேசியதை ஜூனியர் என்டிஆரை தெலுங்கில் மொழி பெயர்த்து சொல்ல சொல்லி கேட்டுக்கொள்ளுங்கள். அவருக்கு கன்னடம் தெரியும் என்பது போல பேசியிருக்கிறார்.
இது தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காந்தாரா படத்தை புறக்கணிப்போம் என்ற ஹேஸ்டாக் தெலுங்கு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது. இதுபோல சென்னையிலும் நடிகர் ரிஷப் ஷெட்டி ஏதேனும் மொழி குறித்து வில்லங்கமாக பேசி விட்டால் தமிழ்நாட்டிலும் காந்தாரா படத்துக்கு சிக்கல் வந்துவிடுமே என்றுதான் தயாரிப்பு நிறுவனம் கரூர் சம்பவத்தை காரணம் காட்டி காந்தாரா பிரமோசனை ரத்து செய்திருக்கிறது.
ஏற்கனவே தக்லைஃப் படம் ரிலீஸின் போது நடிகர் கமல்ஹாசன் தமிழில் இருந்து பிறந்த மொழிதான் கன்னடம் என்று கூறியது பெரிய சர்ச்சையை கிளப்பி, கர்நாடகாவில் அந்த படமே ரிலீஸாகாமல் போய்விட்டது. அதே போல் காந்தாரா படம் குறித்தும் தமிழில் ஏதேனும் சிக்கலாக ரிஷப் ஷெட்டி பேசிவிட்டால் இங்குள்ள தமிழ் ஆர்வலர்களும் தக்லைஃப் படம் சம்பவத்தை மனதில் வைத்து காந்தாரா சாப்டர் 1 படத்தின் சோலியை முடித்துவிடுவார்கள் என்பதாலும் அந்த படத்தின் பிரமோசனை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்திருக்கிறது.





