கலைத்துறையை பொருத்தவரை நடிகர் நடிகைகளுக்குள் காதல் எப்படி ஏற்படுகிறதோ அதைவிட வேகத்தில் பிரிவும் ஏற்பட்டு விடுகிறது. காதல் மணம் புரிந்த நட்சத்திர தம்பதிகள் பலர் தமிழ் சினிமாவில் விவாகரத்து என்ற அஸ்திரத்தை எப்போது கையில் எடுப்பார்கள் என்றே தெரியவில்லை. அதிலும் சிலரது மனமுறிவும் விவாகரத்தும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.
அந்த வகையில் ராமராஜன் நளினி, பார்த்திபன் சீதா, கமல்ஹாசன் சரிகா, பிரசாந்த் கிரஹலட்சுமி, தனுஷ் ஐஸ்வர்யா, ஜெயம் ரவி ஆர்த்தி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அந்த வரிசையில் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் பாடகி சைந்தவி நட்சத்திர தம்பதியும் இப்போது விவாகரத்து பெற்று விட்டனர்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜீவி பிரகாஷ் குமார். பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர். 2 முறை சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருது பெற்றவர். ஒருகட்டத்தில் சினிமாவில் கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வரும் ஜீவி பிரகாஷ் குமார் கடந்த 2013ம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அன்வி என்ற மகள் உள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக ஒன்றாக இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், கடந்தாண்டில் இருவரும் பிரிவதாக திடீரென அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.
சில மாதங்களுக்கு முன்பு இருவரும் ஒரே காரில் சென்னை குடும்ப நல கோர்ட்டுக்கு வந்து பரஸ்பரம் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 25ம் தேதி நடந்த விசாரணையின் போது ஜீவி பிரகாஷ் பாடகி சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது நாங்கள் சேர்ந்து வாழ விரும்பவில்லை. பிரிந்து வாழ விரும்புவதாக இருவரும் தனித்தனியாக நீதிமன்றத்தில் உறுதியாக தெரிவித்தனர்.
வழக்கு விசாரணையின் போது, குழந்தையை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ஜீவி பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்து இருந்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை 30ம் தேதி ( இன்று) ஒத்தி வைத்தார். இந்நிலையில் இன்று ஜீவி பிரகாஷ் பாடகி சைந்தவி இருவருக்கும் பரஸ்பரம் விவாகரத்து வழங்கப்படுவதாக சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.





