தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இப்போது அவரது நடிப்பில் உருவான சர்தார் 2 வா வாத்தியார் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக தயார் நிலையில் உள்ளன. ஆனால் அந்த படங்களின் டிஜிட்டல் ரைட்ஸ் சாட்டிலைட் ரைட்ஸ் வியாபாரம் ஆகாததால் ரிலீஸ் தள்ளிப் போயிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மார்ஷல் என்ற படத்திலும் கார்த்தி இப்போது நடித்து வருகிறார்.
மார்ஷல் படத்துக்கு பிறகு கார்த்தி நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. இது கார்த்தி சுந்தர் சி காம்போவில் உருவாகும் புதிய படம் என்றும் பரபரப்பாக பேசப்பட்டது. மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் இயக்குனர் சுந்தர் சி அந்த படத்தை முடித்துவிட்டு கார்த்தி படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் ஏற்கனவே கார்த்தி நடித்த 2 படங்கள் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. மேலும் மார்ஷல் படமும் தயாராகி வருகிறது என்பதால் 3 படங்கள் இருக்கும் போது 4வது படம் எதற்கு என்று தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தை டிராப் செய்துவிட்டது. இந்த 3 படங்கள் ரிலீஸாகி படத்தின் வெற்றி வாய்ப்பை பொருத்து சுந்தர் சி கார்த்தி படத்தை உருவாக்குவது பற்றி யோசிக்கலாம் என்ற முடிவுக்கு தயாரிப்பு நிறுவனம் வந்துவிட்டது.
அதனால் சுந்தர் சி கார்த்தி இணையும் படம் ரத்தாகி விட்டது. எனினும் சுந்தர் சி கார்த்தி படத்துக்காக ஒதுக்கிய தனது கால்ஷீட் நாட்களை வீணாக்க விரும்பவில்லை. உடனடியாக நடிகர் விஷால் நடிக்கும் படத்தை கையில் எடுக்க முடிவு செய்துவிட்டார். ஏற்கனவே மதகஜ ராஜா படம் வெளியாகி வெற்றி பெற்ற போதே மீண்டும் சுந்தர் சி விஷால் கூட்டணி இணைவதாக இருந்தது.
ஆனால் மூக்குத்தி அம்மன் 2 படம் காரணமாக அந்த திட்டத்தை சுந்தர் சி தள்ளி வைத்திருந்தார். இப்போது கார்த்தி படம் கை நழுவிப் போனதால் மீண்டும் விஷால் கூட்டணியில் புதிய படத்தை உருவாக்க தயாராகி விட்டார். ஏனெனில் 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவான மதகஜ ராஜா படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
அதனால் மீண்டும் விஷால் நடிக்கும் படத்தை சுந்தர் சி இயக்க திட்டமிட்டுள்ளார். வரும் நவம்பரில் படப்பிடிப்பை துவங்கி 2026 மார்ச் மாதத்துக்குள் இந்த படத்தை முடிக்க இயக்குனர் சுந்தர் சி திட்டமிட்டுள்ளார். இந்த படத்துக்கு நடிகர் விஜய் ஆண்டனி இசையமைக்க கமிட் ஆகியுள்ளார். மதகஜ ராஜா படத்துக்கும் இசையமைத்தவர் அவர்தான். வருகிற 2026ல் ஏப்ரல் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.





