டான்ஸ் மாஸ்டர் ரகுராம் மகள் காயத்ரி ரகுராம். இவரும் டான்ஸ் மாஸ்டர்தான். தமிழில் பல படங்களில் காயத்ரி ரகுராம் நடித்திருக்கிறார். நடிகர் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஸ்டைல் பரசுராம் விசில் விகடன் வானம் காதலில் சொதப்புவது எப்படி? வை ராஜா வை இது என்ன மாயம் தாரை தப்பட்டை அருவம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர கன்னடம் மலையாளம் தெலுங்கு படங்களிலும் காயத்ரி ரகுராம் நடித்திருக்கிறார்.
கடந்த 2006ம் ஆண்டில் கலிபோர்னியாவை சேர்ந்த அமெரிக்க மென்பொருள் பொறியாளர் தீபக் சந்திரசேகர் என்பவரை காயத்ரி திருமணம் செய்தார். பிறகு 2008ம் ஆண்டில் கணவர் தீபக் மற்றும் அவரது பெற்றோர் தன்னை கொடுமை செய்வதாக கூறி விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தார். 2010ம் ஆண்டில் தீபக்கை காயத்ரி விவாகரத்து செய்துவிட்டார்.
அதன் பிறகு 2014ம் ஆண்டில் பாஜக தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் காயத்ரி இணைந்தார். 2015ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கலைகளுக்கான பாஜக பிரிவு செயலாளராக காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டார். பாஜக தலைவராக அண்ணாமலை இருந்த போது கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற புகார் எழுப்பி 2023ம் ஆண்டில் அக்கட்சியில் இருந்து விலகினார்.
பிறகு 2024ம் ஆண்டு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இப்போது அவர் அதிமுக மகளிரணி துணைச் செயலாளராக இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த கரூர் சம்பவம் குறித்து நடிகர் சத்யராஜ் எம்ஜிஆர் பாடிய தவறு என்பது தவறிச் செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு செய்தவன் திருந்த பார்க்கணும் தப்பை செய்தவன் வருந்தியாகணும் என கிண்டலாக பாட்டு பாடி நடிகர் விஜயை விமர்சனம் செய்திருந்தார்.
இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை காயத்ரி ரகுராம் சத்யராஜ் குறித்து கடுமையாக பேசியிருக்கிறார். அப்போது காயத்ரி ரகுராம் கூறியதாவது, சத்யராஜ் எதுக்கு பேசறாங்க? அப்போ சினிமா நட்சத்திரங்களை வெச்சுதான் உங்க திமுக அரசு நடக்குது? அப்போ நீங்க ஒரு நட்சத்திரத்தை ( விஜய்) தோல்வியடைய வைக்க பல நட்சத்திரங்களை நீங்க யூஸ் பண்றீங்க?
சத்யராஜ் இருக்கிறார். வைரமுத்து இருக்கிறார். அவங்க எல்லாம் எதுக்குங்க பேசறாங்க? இவங்க எல்லாம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாரம் பத்தி பேசினாங்களா? அஜீத்குமார் சாவு பத்தி பேசினாங்களா? இவங்க எல்லாம் எங்கே போனாங்க இவ்வளவு நாளா? இப்போ இதுக்கு மட்டும் பேசறாங்க? பேசட்டும் யாரும் வேண்டாம் என்று சொல்லலே. எல்லாத்துக்கும் நியாயமா பேசணும் இல்லே. திமுக அரசு எவ்வளவு கேவலமா நடந்துட்டு இருக்குதுன்னு அதை பத்தி சொல்லணும் இல்லே என்று காயத்ரி ரகுராம் அதில் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.





