நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமையன்று கரூரில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் ஒரு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது கட்டுக்கடங்காத கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் 18 பெண்கள் உள்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். அதில் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் இன்னும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இது நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் நடிகர் விஜயை கண்டித்து ஒரு தரப்பினரும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தமிழக போலீசார் தவெக சார்ந்த நிர்வாகிகள் சிலரை கைது செய்துள்ளனர். தவெக பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் தலைமறைவான நிலையில் அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சூழலில் நேற்று முன்தினம் அதாவது சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு வீடியோ ஒன்றை பேசி வெளியிட்ட கட்சியின் தலைவர் நடிகர் விஜய், சிஎம் சார் பழிவாங்கற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேணாலும் செய்யுங்க. என் கட்சிக்காரங்க மேல கை வைக்காதீங்க என்று பேசியிருந்தாா். அவரது பேச்சு வைரலான நிலையில் இதையும் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா இயக்குனர்களில் ஒருவர் கரு பழனியப்பன். இவர் பார்த்திபன் கனவு சிவப்பதிகாரம் பிரிவோம் சந்திப்போம் மந்திரப் புன்னகை சதுரங்கம் நட்பே துணை ஜன்னல் ஓரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். மேலும் டிவி சேனல் ஒன்றில் விவாத நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிசெய்தவர். மேலும் பல படங்களில் உதவி இயக்குனராகவும் இருந்திருக்கிறார்.
நடிகர் விஜய் குறித்தும் தவெக குறித்தும் இயக்குனர் கரு பழனியப்பன் கூறியதாவது, கூட்டத்தில் எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? நான் வந்து பேசிட்டு போயிடுவேன். 41 பேருக்கு வெளிவராத விஜய் அவங்க கட்சியை சேர்ந்த 4 பேரை புடிச்சதும் 4 நாள் கழித்து வந்து, என்னை என்ன வேணா செஞ்சுக்குங்க என்று சினிமா டயலாக் பேசுகிறார்.
மன்னிப்பு கேட்கவே அவர் தயாராக இல்லை. இவரெல்லாம் ஒரு தலைவனா? தலைவனும் முட்டாளா இருக்கான், தொண்டனும் அடி முட்டாளா இருக்கான். இவ்வளவு பிரச்னைக்கு நடுவுல ஸ்டாண்ட் வித் விஜய் என்று போடுகிறான். முதலமைச்சர் அவ்வளவு பண்பா பேசுகிறார். நீங்க மறுபடியும் தூண்டிவிடுகிற மாதிரி பேசுறீங்க? அரசியலில் விஜய் மாதிரி ஒரு மோசமான ஆள் கிடையாது என்று கரு பழனியப்பன் பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





