வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் சூரி. தொடர்ந்து பல படங்களில் அவரது காமெடி நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் ரஜினி விஜய் அஜீத்குமார் தனுஷ் ரவிமோகன் சூர்யா விஷால் சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து நட்சத்திர நடிகராக மாறினார்.
அதன்பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்த படம் விடுதலை பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விடுதலை 2 கருடன் கொட்டுகாளி மாமன் ஆகிய படங்களில் நடித்து அந்த படங்களும் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்ததால் இப்போது ரூ. 15 கோடி ஒரு படத்துக்கு சம்பளம் வாங்கும் நிலைக்கு சூரி உயர்ந்திருக்கிறார்.
கடுமையான உழைப்பு திறமையால் முன்னுக்கு வந்த கலைஞர்களில் நடிகர் சூரியும் ஒருவர். சீமராஜா படத்துக்காக ஒரு நிமிடத்துக்கும் குறைவாகவே திரையில் வரும் காட்சிக்காக சூரி சிக்ஸ்பேக் வைத்து நடித்திருந்தார். அந்த காட்சிதான் இயக்குனர் வெற்றிமாறனுக்கு விடுதலை படத்தில் சூரியை கதாநாயகனாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் குடும்பக்கதை பின்னணியில் வெளியான நடிகர் சூரி நடித்த மாமன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார், எல்ரட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
மண்டாடி படத்தில் தெலுங்கு நடிகர் சுஹால் முக்கிய கேரக்டரில் அதாவது வில்லனாக நடிக்கிறார். இந்த சூழ்நிலையில் மண்டாடி படத்தின் படப்பிடிப்பு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி என்ற கடல் பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக படக்குழுவினர் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 2 பேர் எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கினர். அவர்களை அருகில் இருந்த மற்றவர்கள் போராடி மீட்டனர். இந்த விபத்தில் எந்த உயிர் சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும் படகுடன் சேர்ந்து படப்பிடிப்புக்கு பயன்படுத்திய கேமராக்கள் உள்ளிட்ட சில முக்கிய படப்பிடிப்பு சாதனங்கள் கடலில் மூழ்கி விட்டது. இதனால் படக்குழுவிற்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடலுக்குள் நடந்த இந்த விபத்து குறித்து இராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சூரி ரசிகர்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





