நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் எல்ஐகே. இந்த படத்தை விக்னேஷ் சிவன் டைரக்ட் செய்திருக்கிறார். எஸ்எஸ் லலித்குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். வருகிற 18ம் தேதி இந்த படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 23 அல்லது பிப்ரவரி 12ம் தேதி அன்றுதான் இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
எல்ஐகே படம் குறித்த தேதியில் அதாவது வருகிற 18ம் தேதி வெளியாகாமல் தள்ளிப் போனதற்கு 2 முக்கிய காரணங்கள் என்ற தகவல் இப்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை மொத்தம் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் லலித்குமார் அதற்காக இதுவரை 60 கோடி ரூபாய் செலவழித்து விட்டார்.
இன்னும் அவரது தரப்பில் 5 கோடி ரூபாய் மட்டுமே தர வேண்டியுள்ளது. ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை உருவாக்க மேலும் 18 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்பட்டுள்ளது. அந்த 18 கோடி ரூபாயை கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் லலித்குமாருக்கு நெருக்கடி தந்திருக்கிறார். அந்த விவகாரம்தான் இந்த படம் தள்ளிப் போக ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
மேலும் இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனே எல்ஐகே படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை 16 கோடி ரூபாய் விலை பேசி தயாரிப்பாளர் லலித்குமாரிடம் வாங்கியிருக்கிறார். படம் ரிலீஸாகும் நேரத்தில் தனக்கு நிறைய செலவுகள் இருப்பதால் அந்த 16 கோடி ரூபாயை தருமாறு விக்னேஷ் சிவனிடம் தயாரிப்பாளர் லலித்குமார் கேட்டிருக்கிறார்.
ஆனால் எல்ஐகே படத்தை ஏதேனும் ஒரு ஓடிடி நிறுவனத்துக்கு விலைபேசி விற்றுவிட்டு அதன்பிறகுதான் உங்களுக்கு அவர்கள் தரும் பணத்தை வாங்கி தர முடியும். அதற்கு முன்பாக நான் பணம் தர முடியாது என்று லலித்குமாரிடம் விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு பஞ்சாயத்துகள் காரணமாக தான் எல்ஐகே படம் ரிலீஸ் தள்ளிப் போய்விட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஆக மொத்தத்தில் எல்ஐகே படம் வெளியாவதில் இருக்கும் சிக்கல் லலித்குமார் விக்னேஷ் சிவன் இடையே நீடிக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தான் என்பது உறுதியாகி விட்டது. அதே நேரத்தில் ஜனவரி 23 அல்லது பிப்ரவரி 12 தேதிகளில் எல்ஐகே படம் ரிலீஸ் ஆகுமா, அதற்கு பிறகும் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் இந்த படம் ரிலீஸ் இன்னும் தள்ளிப் போகுமா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.





