தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். கேப்டன் என்ற ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட அவர் ஏழை எளிய மக்களுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்தவர். 2005ம் ஆண்டில் தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தையும் ஆரம்பித்து பல வெற்றிகளை பெற்றார்.
மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்து கடன்களை அடைத்தார். தமிழ் சினிமா சந்தித்த பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டவர் விஜயகாந்த். அதே நேரத்தில் சினிமா அரசியல் இரண்டு துறைகளிலும் ஒரு வெற்றிக்கரமான மனிதராக வலம் வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் 71வது வயதில் காலமானார்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு தன்னை காண வருபவர்களிடம் சாப்பிட்டீங்களா என்று கேட்பதும் யார் வந்தாலும் அவர்களை சாப்பிட வைத்து அனுப்புவதும்தான் விஜயகாந்தின் உயர்ந்த குணம். இப்போதும் சென்னை கோயம்பேடு தலைமை தேமுதிக அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் பொன்ராம் இயக்கிய கொம்பு சீவி என்ற படம் வருகிற 19ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஏற்கனவே மதுரை வீரன் சகாப்தம் படைத்தலைவன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இப்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன் போன்ற வெற்றிப் படங்களை தந்த பொன்ராம் இயக்கத்தில் கொம்பு சீவி படத்தில் சண்முக பாண்டியன் நடித்துள்ளார்.
இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அந்த விழாவில் நடிகர் சண்முக பாண்டியன் பேசியதாவது, அப்பாவின் இறையச்சடங்குகள் நல்லடக்கம் அனைத்தையும் முடித்துவிட்டு நானும் அண்ணனும் அம்மாவும் வீட்டுக்கு வந்து அப்போது கலந்து பேசி ஒரு முக்கிய முடிவை எடுத்தோம்.
அதாவது இனி என்ன ஆனாலும் சரி அப்பா எப்படி அன்னதானம் செய்து கொண்டிருந்தாரோ இதே போல் நாமும் மக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அதை நமது கடைசி காலம் வரையிலும் தொடர்ந்து செய்ய வேண்டும். நாளை நமது குழந்தைகள் வந்த பின்னரும் அவர்களையும் இந்த அன்னதானத்தை தொடர்ந்து செய்யச் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தோம் என்று சண்முகபாண்டியன் நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார்.





