தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆடுகளம் படம் மூலம் நன்கு பரிச்சயமானவர் நடிகை டாப்ஸி. இந்த படத்தில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருந்தார். இந்த கேரக்டரில் முதலில் திரிஷா நடிப்பதாக இருந்து பிறகு டாப்ஸி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் டாப்ஸிக்கு நடிகை மற்றும் பாடகியான ஆண்ட்ரியா பின்னணி குரல் கொடுத்திருந்தார்.
ஆடுகளம் படத்தை அடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட பல படங்களில் டாப்சி நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள டாப்ஸி இந்தியிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். தமிழில் நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் போல இவரும் தன்னை மையப்படுத்திய கதைகளில் நடிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். அப்படிப்பட்ட கதைக்களத்தில் எடுக்கப்பட்ட படங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன.
சமீபத்தில் இவர் பாலிவுட்டில் நடித்த டன்கி மற்றும் ஜூட்வா 2 ஆகிய படங்களுக்கு அதிக சம்பளம் பெற்றதாக இணையத்தில் ஒரு தகவல் வைரலானது. தற்போது அதற்கு நடிகை டாப்ஸி மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகை டாப்ஸி கூறுகையில், நான் ஜூட்வா 2 மற்றும் டன்கி போன்ற படங்களில் அதிக பணத்திற்காக நடித்ததாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மைக்கு நேர்மாறானது. நான் அந்த படங்களுக்கு அதிக சம்பளம் பெறவில்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும் நடிகை டாப்ஸி கூறுகையில், தங்கள் படத்தில் நடிக்கும் நடிகைகளை அந்த படத்தில் நடிக்கும் ஹீரோ நடிகர்களே தேர்ந்தெடுப்பதாகவும் கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், இப்போது தங்கள் படங்களில் ஹீரோயின் யார் என்பதை ஹீரோக்கள்தான் தீர்மானிக்கிறார்கள் என்பது நமக்கு தெரிந்ததுதான்.
அதில் சிலர் டிரண்டிங்கில் இருக்கும் ஒருவரையும் அதிக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒருவரையும் நடிக்க வைக்க விரும்புவார்கள். சிலர் தங்களை விட சிறிய நடிகைகளை நடிக்க வைக்க நினைப்பார்கள் என்று கூறி இருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகைகளை நடிகர்களே தேர்வு செய்வதும், தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் முடிவு இதில் மிக முக்கியமானது என்பது குறிப்பிடதக்கது.





