சில இயக்குனர்கள் நல்ல படங்களை தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தருகின்றனர். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி விடுகின்றனர். அந்த வரிசையில் இப்போது இயக்குனர் விக்ரமனும் சேர்ந்து விட்டார். தமிழ் சினிமாவில் பல மாஸ் வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். அவரது பல படங்கள் வெள்ளி விழா படங்களாக இருந்தன.
குறிப்பாக விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் சூரியவம்சம் உன்னை நினைத்து உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பூவே உனக்காக வானத்தை போல என அவரது இயக்கத்தில் உருவான படங்கள் மாஸ் ஹிட் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அவர் படம் எதுவும் டைரக்ட் செய்யவில்லை.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய விக்ரமன் நீண்ட நாட்களாக படம் டைரக்ட் செய்யாமல் இருப்பது குறித்து வெளிப்படையாக கூறியிருக்கிறார். இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, சில ஆண்டுகளாக என் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரால் மற்றவர்களை போல எழுந்து நடமாட முடியாது.
அதனால் தான் நான் படங்கள் எதுவும் டைரக்ட் பண்ணாமல் அவரை அருகில் இருந்து கவனமாக பார்த்துக் கொள்கிறேன். அவரும் நீங்கள் போய் படம் பண்ணுங்க, நர்ஸ் இருக்காங்க என்னை பார்த்துக்குங்க என்றுதான் சொல்கிறார். ஆனாலும் எனக்கு ஒரு பயம் இருக்கு. யாரையும் நம்பி இப்படி அவரை விட்டுட்டு நான் போக முடியாது.
இந்த சூழ்நிலையில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் கோவிலுக்கு போவேன். அது மட்டும்தான் என் மனைவியை நான் பிரிந்திருக்கும் நேரம். மற்ற எல்லா நேரமும் நான் அவரோடு தான் பக்கத்தில் இருக்கிறேன். மாலையில் பக்கத்தில் எங்காவது வாக்கிங் செல்வேன்.
இது மட்டும்தான் நான் அவரை விட்டுவிட்டு வெளியில் செல்கிற நேரம். அதனால்தான் படங்கள் இயக்குவதில்லை என்று தனது மனைவி குறித்து இயக்குனர் விக்ரமன் கூறியிருக்கிறார். சமீபத்தில் நடனக் கலைஞரான விக்ரமன் மனைவிக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.





