அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. புஷ்பா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்து தெலுங்கில் முன்னணி நிறுவனமாக இருக்கும் மைத்திரி மூவிஸ் நிறுவனம் தான் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் முதல் முறையாக தமிழ்நாட்டில் கால் பதிக்கிறது.
இதில் அஜித் குமாருடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், தெலுங்கு நடிகர் சுனில், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இவர் தன்னைத் தீவிர அஜித் ரசிகர் என்பதை, தான் செல்லும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பதிவு செய்திருக்கிறார். இதற்கு முன்னதாக மார்க் ஆண்டனி என்னும் வெற்றி திரைப்படத்தை அவர் கொடுத்தார்.
இதற்குக் காரணமும் அஜித்குமார் தான் என்று பல்வேறு இடங்களில் விளக்கி இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். அவரிடம் நான் ஒரு கதையை கூறும் போது, ஆதிக் முதலில் ஒரு பெரிய வெற்றியை கொடுத்துவிட்டு வாருங்கள், நாம் இணையலாம் என்று தன்னை ஊக்கப்படுத்தியதாக அவர் தெரிவித்து இருந்தார்.
சொன்னபடியே மார்க் ஆண்டனி திரைப்படம் அவருக்கு வெற்றிமேல் வெற்றியை கொடுத்தது. 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது குட் பேட் அக்லியை அவர் எடுத்து முடித்திருக்கிறார். தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில் கேமியோ ரோலில் சிம்ரன் நடிப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு, இசையமைத்திருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதலால் அவர் பாதியில் விலக பின்னணி இசையில் கவனம் செலுத்தினார் ஜீவி பிரகாஷ். வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் தற்போது அப்டேட்டுகளை, படக்குழு வெளியிட ஆரம்பித்திருக்கிறது. அதன்படி படத்தில் திரிஷா இருப்பதை உறுதி செய்திருக்கும் படக்குழு அவர் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் வருவதாக தெரிவித்துள்ளது. இதற்கான வீடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதில் செம ஸ்டைலிசாக காட்சி இருக்கிறார் திரிஷா. அடுத்தடுத்து படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரிவீல் செய்யப்படும் என்று பலரும் கூறி வருகின்றனர்.





