தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் எச் வினோத். நடிகர் நட்டி நடராஜ் நடித்த சதுரங்க வேட்டை படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படமாக இருந்தது. மோசடி பேர்வழிகள் பற்றிய கதைக்களத்தில் உருவான இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது.
தொடர்ந்து கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் 1 என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். வடநாட்டு லாரி கொள்ளையர்களை மையப்படுத்திய இந்த படம் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த விறுவிறுப்பான படமாக இருந்தது. அதிலும் நடிகர் கார்த்திக்கு இந்த படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அடுத்து நடிகர் அஜீத்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு படங்களை இயக்கிய எச் வினோத் அடுத்ததாக விஜய் நடித்த ஜனநாயகன் என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படம் வருகிற பொங்கலுக்கு ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. இது விஜயின் கடைசி படமாக உள்ளது.
நாளை மறுதினம் 27ம் தேதி ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. இந்த விழாவுக்காக ரூ. 12 கோடி வரை செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்குனர் எச் வினோத் டைரக்ட் செய்ய கமிட் ஆகியிருக்கிறார்.
நடிகர் தனுஷ் படத்தை இயக்கி முடித்த பிறகு அடுத்ததாக இயக்குனர் எச் வினோத் இயக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அது நடிகர் கார்த்தி நடிக்கும் படம்தான் என்பதும் உறுதியாகி உள்ளது. தீரன் அதிகாரம் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு எச் வினோத் – கார்த்தி கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்த படம் தீரன் அதிகாரம் 1 படத்தின் தொடர்ச்சியாக 2ம் பாகமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தீரன் அதிகாரம் 1 படத்தின் 2ம் பாகம் வெளியாகும் என்று கோலிவுட்டில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது அந்த படம் மீண்டும் உருவாகும் என்பது உறுதியாகி உள்ளது. தொடர்ந்து தோல்வி படங்களை தந்து வரும் கார்த்திக்கு இந்த படம் பெரிய வெற்றியை தரும் கம்பேக் படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





