தமிழ் சினிமாவை விட்டு ஜனநாயகன் படத்துடன் விலகுவதாக நடிகர் விஜய் ஏற்கனவே அறிவித்து விட்டார். சமீபத்தில் மலேசியாவில் நடந்த அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அதை உறுதி செய்திருக்கிறார். அதனால் இனி முழுக்க முழுக்க அவரது கவனம் செயல்பாடு முழுவதும் அரசியல் களத்தில்தான் இருக்கப் போகிறது என்பது தெளிவாகி விட்டது.
அதே நேரத்தில் சினிமாவில் அவர் விட்டு செல்லும் உச்ச இடத்தை அடுத்து பிடிக்கப் போவது யார் என்ற கூச்சலும் தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. இனி விஜய் இடத்தில் சிவகார்த்திகேயன்தான் என்று அவரது ரசிகர்கள் ஆரவாரமாக சொல்லி வரும் நிலையில், அதற்கான தகுதி எஸ்கேவுக்கு சிறிதும் இல்லை என்று தளபதி ரசிகர்களும் பதிலடி தந்து வருகின்றனர்.
இந்த சூழலில் வருகிற ஜனவரி 9ம் தேதி நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படமும் மறுநாள் 10ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாவது கடும் போட்டியாக இருக்கும் என்று தெரிய வருகிறது. வேண்டும் என்றே திட்டமிட்டு இப்படி பராசக்தி படம் ஜனநாயகன் படத்துடன் மோதுவதாகவும் சினிமா ரசிகர்களிடையே விமர்சனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இதுபற்றி திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருப்பதாவது, விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் கடந்த தீபாவளிக்கே ரிலீஸ் செய்வதாக இருந்தது. ஆனால் ஜனவரியில் ரிலீஸ் செய்தால்தான் வியாபாரம் நன்றாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் பராசக்தி படம் பூஜை போடப்பட்ட நாளிலேயே பொங்கல் ரிலீஸ் என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள்.
அதனால் அடுத்தடுத்த நாட்களில் ஜனநாயகன் படமும் பராசக்தி படமும் வெளிவருவது போட்டிக்காக செய்யப்படவில்லை. பராசக்தி படத்தை பொறுத்தவரை தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் 14ம் தேதி ரிலீஸ் செய்தால் 6 முதல் 7 ஏழு நாட்கள் இடைவெளி இருக்கிறது. ஜனநாயகன் பெரிய ஹிட் ஆகும் என்றுதான் நினைக்கிறோம். 2 வாரங்கள் அந்த படத்தை திரையிடுவோம். நீங்கள் 26ம் தேதி வரவேண்டும் என்று சொன்னோம்.
ஆனால் அவர்களோ நாங்கள் இந்த தேதியை பிளான் செய்துதான் வியாபாரம் எல்லாம் செய்துவிட்டோம். 10ம் தேதியே வருகிறோம் என்று சொல்லி தான் வருகிறார்கள். அதனால் இந்த படங்கள் நிச்சயமாக போட்டிக்கு வரவில்லை என்று திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருக்கிறார். இதன்மூலம் பராசக்தி படம் முதலிலேயே திட்டமிட்டபடி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. ஜனநாயகன் படம்தான் தீபாவளிக்கு பதிலாக பொங்கலுக்கு ரிலீஸாகிறது என்பதை அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.





