“நெல்சன்” விஜய்யை வைத்து இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகவும் சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தது. அந்த சமயத்தில் நெல்சனை பலரும் கேலி செய்தனர். “பீஸ்ட்” படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்தின் படத்தை இயக்க நெல்சன் ஒப்பந்தமாகிவிட்டார்.

“பீஸ்ட்” திரைப்படத்திற்கு கிடைத்த சுமாரான வரவேற்பு ரஜினி ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அது மட்டுமல்லாது நெல்சன், ரஜினிகாந்தை வைத்து இயக்க உள்ள திரைப்படம் டிராப் ஆகிவிடும் என்றே பேசத்தொடங்கிவிட்டனர்.
எனினும் “ஜெயிலர்” என்ற டைட்டிலுடன் அத்திரைப்படம் உருவாகி கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தன்னை கலாய்த்தவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்தது போல் நெல்சன் “ஜெயிலர்” திரைப்படத்தை உருவாக்கியுள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்தளவுக்கு “ஜெயிலர்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆகியுள்ளது. கிட்டத்தட்ட உலகளவில் ரூ.400 கோடிகளுக்கும் மேல் இத்திரைப்படம் வசூல் ஆகியுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

இவ்வாறு “ஜெயிலர்” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்திருப்பதை தொடர்ந்து நெல்சனுக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். அதாவது சிவகார்த்திகேயன் மீண்டும் நெல்சனுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கலாம் என நெல்சனை அணுகியுள்ளாராம்.
அதே போல் கமல்ஹாசனின், ராஜ் கமல் நிறுவனமும் நெல்சனை அணுகி தனது பேன்னரில் ஒரு படம் இயக்கித்தருமாறு பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறதாம். மேலும் “பீஸ்ட்” திரைப்படம் உருவாகிக்கொண்டிருந்தபோதே சில தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் நெல்சனை வைத்து படம் தயாரிக்கலாம் என்று அவரை அணுகினார்களாம்.
ஆனால் “பீஸ்ட்’ திரைப்படத்தின் ரிசல்ட்டை பார்த்துவிட்டு அவர்கள் அந்த சமயத்தில் பின் வாங்கிவிட்டார்களாம். தற்போது “ஜெயிலர்” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் அந்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் நெல்சனை அணுகியுள்ளனராம். இவ்வாறு நெல்சனின் காட்டில் அடை மழை பெய்து வருகிறதாம்.





