நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அவரது 25வது படம் பராசக்தி வருகிற ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான பராசக்தி படத்தில் ரவி மோகன் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் அதர்வா ஸ்ரீ லீலா குரு சோமசுந்தரம் பஷீல் ஜோசப் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
பராசக்தி படம் முதலில் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது 4 நாட்கள் முன்னதாக ஜனவரி 10ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பராசக்தி படம் வெளியாக உள்ளது குறிப்பாக விஜய் நடித்த ஜனநாயகன் படத்துடன் பராசக்தி படம் மோதுவது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே பராசக்தி படத்தின் பிரமோசனுக்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’ என்ற சிறப்பு கண்காட்சி கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. இதில் கடந்த 1960 – 65ம் ஆண்டுகளில் மெட்ராஸ் காலகட்டம் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை விளக்கும் விதமாக கண்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் பராசக்தி படம் உருவான விதம் குறித்து வீடியோ ஒன்றை பராசக்தி படக்குழு இப்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, எனக்கு செழியன் என்ற பெயரே ரொம்ப பிடித்திருந்தது. அதை அனைவரும் சே என கூப்பிடும் போது ரொம்பவும் பவர்கஃபுல்லாக இருந்தது. இவ்வளவு பவர்ஃபுல்லான எமோஷன்கள் கொண்ட கதாபாத்திரமாக செழியன் இருந்தாலும் அதில் என்டர்டெயின்மென்ட் பண்றதுக்கான இடமும் இருந்தது.
ஸ்கிரிப் ரீடிங் தினமும் ஆபீசில் நடந்தது. ஒவ்வொரு படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்னாடியும் ஸ்கிரிப்ட் படிப்போம். இது மாதிரி நான் படிச்சிருந்தா டாக்டர் ஆகியிருப்பேன். இல்லையென்றால் பொறியியல் படிப்புல கோல்டு மெடலிஸ்ட் ஆகியிருப்பேன் என்று எங்க வீட்டுல சொன்னேன். இந்த படத்துக்காக தான் முதல் முறையாக ஹைவேஸ் பேண்ட் அணிந்தேன். அதுவே சுவாரசியமான தருணமாக இருந்துச்சு. இதுக்கு முன்னாடி பாடல் காட்சியில் கூட நான் அந்த காஸ்டியூம் போட்டது கிடையாது.
மாணவர்களும் மாணவ இயக்கங்களும் எவ்வளவு பவர் ஃபுல் என்று சொல்வதுதான் இந்த படத்தோட ஸ்கிரிப்ட். இப்படி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கும்போது ஒரு ஹீரோவா அதை செய்ய நான் ஏன் யோசிக்கணும்? நம்ம மண் மொழி சார்ந்த படம் இது. பராசக்தி முழுமையான கமர்சியல் திரைப்படம். அனைத்து வகையான எமோஷன்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. இந்த படம் திரையரங்கில் அதிரடியான அனுபவத்தை கொடுக்கும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.





