தமிழ் சினிமாவில் திருமணத்துக்கு பிறகு ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக நயன்தாரா இப்போதும் இருந்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு அவரது நடிப்பில் வெளியான சில படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. குறிப்பாக டெஸ்ட் என்ற படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்தது.
அதைத் தொடர்ந்து இப்போது தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நயன்தாரா நாயகியாக இணைந்து நடித்திருந்தார். தமிழில் அவர் மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் இன்னும் அந்த படம் திரைக்கு வரவில்லை. சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு விற்பனை மற்றும் சானிடரி நாப்கின் விற்பனையிலும் நயன்தாரா ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் மலையாள பட நடிகை மற்றும் இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கேஜிஎஃப் படத்தில் நடித்த நடிகர் யஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது,
இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிகைகள் நயன்தாரா கியாரா அத்வானி ருக்மணி வசந்த் மற்றும் ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் 4 பேருமே பெரிய நட்சத்திர நடிகைகள் என்பது குறிப்பித்தக்கது. டாக்ஸிக் படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் உருவாகி வருகிறது.
வருகிற 2026ம் ஆண்டில் மார்ச் மாதம் 19ம் தேதி டாக்ஸிக் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் டாக்ஸிக் படத்திலிருந்து நடிகைகள் கியாரா அத்வானி மற்றும் ஹூமா குரேஷி ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரிய அளவில் வைரலானது. இதையடுத்து இன்று டாக்ஸிக் படத்தில் இருந்து நடிகை நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கங்கா என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்ற தகவலும் அந்த போஸ்டரில் அறிவிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் பில்லா ஆரம்பம் ஜவான் போன்ற படங்களில் இருந்தது போன்று நயன்தாரா போஸ்டரில் காணப்படுகிறார். இந்த படத்தில் நயன்தாரா படத்தின் ஹீரோ யஷூவுக்கு அக்கா கேரக்டரில் வில்லத்தனமான தோற்றத்தில் நடித்துள்ளார்.





