நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் மறுநாள் 10ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதும் ஒரு அரசியல் அழுத்தமாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இப்போது ஜனநாயகன் படத்துக்கு பெரிய சிக்கல் உருவாகி உள்ளது.
ஜனநாயகன் படம் கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதியே சென்சார் போர்டுக்கு தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பப்பட்டு விட்டது. அப்போது படத்தை பார்த்த சென்சார் குழு அதிகாரிகள் படத்தில் இருந்த சண்டை காட்சிகளில் மட்டும் 3 இடங்களில் நீக்குமாறு கூறியிருக்கிறார்கள். அதே போல் படக்குழுவும் அந்த காட்சிகளை நீக்கி விட்டு டிசம்பர் 24ம் மீண்டும் சென்சாருக்கு படத்தை அனுப்பினர்.
ஆனால் தணிக்கைக்குழு தரப்பில் இருந்து சான்றிதழ் தருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. 10 நாட்களுக்கு மேலாகியும் பலமுறை படக்குழு தரப்பில் சென்சார் போர்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டு சான்றிதழ் தராமல் இழுத்தடித்த நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் நேற்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
நேற்று நீதிபதி முன்பு வந்த விசாரணையில், படத்தில் மதம் சார்ந்த சில எதிர்மறை கருத்துகளும் சில காட்சிகளும் இருப்பதால் படத்தை ஆய்வுக்குழுவுக்கு அனுப்பியதாக சென்சார் போர்டு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. மேலும் 9ம் தேதி படம் ரிலீஸ் என்று முடிவு செய்துவிட்டு படத்தை விரைவில் தணிக்கை செய்து தருமாறு நெருக்கடி தருவதாக படக்குழு மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது.
நாளை ( இன்று) இந்த விசாரணை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் இந்த வழக்கின் விசாரணை நடந்தது. அப்போது சென்சார் போர்டு தரப்பில், படத்தில் பல ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வருகின்றன. அதனால் படத்தை முழுமையாக ஆய்வு செய்து சான்றிதழ் தர 4 வாரங்கள் அவகாசம் தேவை என்று கூறப்பட்டது. படத்தில் வரும் சில காட்சிகள் வசனங்கள் குறித்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் விளக்கம் தரப்பட்டது.
வெளிநாடுகளில் ஜனநாயகன் படத்தை வெளியிட அனுமதித்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் ஜனநாயகன் படத்துக்கு இப்படி இடையூறு தருவது நியாயமல்ல என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. வெளியீட்டு தேதியை காரணமாக காட்டி சென்சார் போர்டை உடனே தணிக்கை சான்றிதழ் தர வற்புறுத்த முடியாது என்ற நிலையில் ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வருமா? என்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தளபதி ரசிகர்கள் கடும் விரக்தியில் இருந்து வருகின்றனர்.





