பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட்கார்டு காட்டி வெளியேற்றப்பட்ட கம்ருதீன் டிவி சீரியல் நடிகர் என்பது பலருக்கும் தெரியாது. இவர் மகாநதி உள்ளிட்ட சில டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் மக்கள் மத்தியில் இன்னும் அதிகமாக பிரபலமாகி சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை பெறலாம் என்ற ஒரு ஆசையில் தான் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக வந்தார்.
ஆனால் அவரது போதாத நேரம் பார்வதியுடன் சேர்ந்துக்கொண்டு அவர் தாறுமாறாக பேசிய விதமும் நடந்து கொண்ட மோசமான நடவடிக்கைகளாலும் ரெட் கார்டு காட்டப்பட்டு அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த சூழ்நிலையில் கம்ருதீன் முன்பு நடித்து வந்த மகாநதி என்ற சீரியலில் இருந்து நீக்கப்பட்டதாக ஒரு தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. உண்மையிலேயே அவர் மகாநதி சீரியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டாரா? அவருக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறதா என்பது குறித்த முக்கியமான தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மகாநதி சீரியல் படக்குழுவினர் கூறியதாவது, மகாநதி சீரியலில் கம்ருதீன் நடித்துக் கொண்டு இருந்தார். அவருடைய கேரக்டர் முக்கியமான ஒரு துணை கதாபாத்திரமாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துக்கொள்ள வாய்ப்பு வந்தபோது யூனிட்டில் இருந்த ஒருவர் முக்கியமான ஷோவில் கலந்துக்கொள்ள செல்வது சந்தோஷம் என்பதால் எல்லோரும் சேர்ந்து உற்சாகமாக அவரை அனுப்பி வைத்தோம்.
அந்த ஷோவில் அவர் எப்படி விளையாடுவார்? எவ்வளவு நாள் இருப்பார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அதனால் சீரியலில் அவருடைய கேரக்டரை தற்காலிகமாக வெளிநாடு போகிற மாதிரி காட்டி இருப்போம். அவர் அந்த ஷோவில் நன்றாக விளையாடி வந்ததால் ஓரிரு வாரத்தில் அவர் திரும்ப வாய்ப்பில்லை என்று எங்களுக்கு தெரிந்தது.
அதனால் டிவி சேனல் தரப்பில் டிஸ்கஸ் பண்ணியபோது, அந்த கேரக்டருக்கு ஆளை மாற்றுவதாக இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் வேறு கேரக்டரை கமிட் செய்யாமல் வெளிநாட்டில் அந்த கேரக்டர் செட்டில் ஆகிவிட்ட மாதிரி காட்டி கேரக்டரை முடித்து விட்டோம். அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது போல மகாநதி சீரியலில் இருந்தும் இப்போது விலக்கப்பட்டார் என்கிற ரீதியில் தகவல் பரவி வருகிறது ஆனால் உண்மை அதுவல்ல.
கம்ருதீன் கேரக்டர் ஏற்கனவே வெளிநாட்டில் செட்டில் ஆனது போல் காட்டி முடித்து விட்டோம் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். மீண்டும் இந்த சீரியலில் கம்ருதீன் நடிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, இப்போது கதை வேறு மாதிரியான கோணத்தில் டிராக் மாறி போய்க்கொண்டிருக்கிறது. அதனால் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்றும் படக்குழு தரப்பில் கூறுகின்றனர். அதனால் மகாநதி சீரியலில் கம்ருதீன் கேரக்டர் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு வாய்ப்பு எதுவும் மறுக்கப்படவில்லை.





