இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வௌியான படம் பராசக்தி. இந்த படத்தின் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். நடிகர் ரவிமோகன் வில்லனாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். இது ஜீவி பிரகாஷ்குமாரின் இசையில் 100வது படம் என்ற சிறப்புக்குரியது. இந்த படம் இன்று காலை வெளியானது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் ராஜ்யசபா எம்பி நடிகர் கமல்ஹாசன் பராசக்தி படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது, தமிழ்த் தீ பரவட்டும். அன்புள்ள இளவல் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, பராசக்தி படத்தை பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இந்த படம் நம் கூட்டணி எதிர்கொள்ள போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாக போகிறது என்று. ஆம் இந்த படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டும் அல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்த படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றி திலகம். பின்னால் வந்தாலும் முந்தி சொல்ல வேண்டியது. உணர்ச்சி முந்திக் கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது.
முதல் பாராட்டு இந்த பயோபிக்சன் கதையையும் இதன் இயக்குனர் சுதா கொங்கராவையும் இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப் போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும். இந்த சினிமா சரித்திரத்தில் இணைந்து விட்ட ரவி மோகன் அதர்வா ஸ்ரீலீலா இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் மற்றும் இந்த படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார பாராட்டுக்கள் என்று நடிகர் கமல்ஹாசன் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
இந்த பதிவின் வாயிலாக பராசக்தி படம் திமுக வரலாறை பேசுகிற படம் என்றும் வருகிற சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி பிரசாரத்தில் முரசொலிக்க போகிற படமாகவும் இருக்கும் என்றும் திமுக கூட்டணி சார்ந்த நடிகர் கமல்ஹாசன் இந்த பதிவின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ஆனால் இந்த படத்தின் நாயகனாக நடித்த சிவகார்த்திகேயன், பராசக்தி என்பது அரசியல் படம் அல்ல. நான் எந்த அரசியல் அமைப்பையும் சார்ந்தவன் இல்லை. மாணவர்களின் மொழி போராட்டத்தை மட்டுமே மையப்படுத்திய கதைதான் பராசக்தி என்று கூறியிருந்தார். இப்போது அதற்கு நேர்மாறான ஒரு கருத்தை நடிகர் கமல்ஹாசன் பதிவு செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





