நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1975ம் ஆண்டில் நடிக்க வந்த போதே நடிகர் கமல்ஹாசன் நட்சத்திர நடிகராக தமிழ் சினிமாவில் இருந்தார். எனினும் புதிய அறிமுக நடிகர் ரஜினியுடன் கமல்ஹாசன் நட்பாக பழகினார். பாரபட்சமின்றி நண்பராக அவரை ஏற்றுக்கொண்டார். இருவரும் பல படங்களில் இணைந்தும் நடித்தனர்.
ஒரு கட்டத்தில் ரஜினி கமல் இணைந்து நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. வசூலையும் குவித்தன. ஆனால் அவர்கள் சம்பளம் உயரவில்லை. தயாரிப்பாளர்களே கணிசமான லாபம் சம்பாதித்தனர். இதன்பிறகு இருவரும் கலந்து பேசி இனி தனித்தனியாக இருவரும் நடிப்பது என்ற முக்கிய முடிவுக்கு வந்தனர்.
அதன்பிறகு 40 ஆண்டுகளாக இருவரும் தனியாக நடித்து இரண்டு சிகரங்களாக தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டிருக்கின்றனர். எனினும் அந்த நட்பும் பாசமும் இருவருக்கும் உள்ள அந்த நெருக்கமும் சிறிதும் குறையவில்லை. ரஜினியும் கமலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத அபூர்வ நண்பர்களாக இன்றும் தங்களது நட்பில் இறுக்கமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நீண்ட காலத்துக்கு பிறகு நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. வரும் ஏப்ரலில் தலைவர் 173 படத்தில் ரஜினி நடிக்கிறார். அந்த படத்துக்கு பிறகு படத்தில் ரஜினி கமல் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்கிறார்.
ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்துக்கான பிரமோ ஷூட் 3 நாட்களுக்கு சென்னையில் நடக்கிறது. இதற்காக அங்கு ஒரு ஸ்டுடியோவில் மேல் தளம் கீழ் தளம் ஆகிய 2 தளங்களிலும் பிரமாண்ட ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு ஷெட் பெரிய ஓட்டலாகவும் மற்றொன்று மெக்கானிக் ஷெட்டாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி கமல் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
ரஜினியும் கமலும் ஓட்டல் முதலாளியாக ஒருவர் மெக்கானிக்காக ஒருவர் இந்த படத்தில் நடிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான வாய்ப்பு இல்லை. இது வேறு மாதிரியான காட்சிகளாக இருக்கலாம். ஓட்டலில் மெக்கானிக் செட்களில் சம்பவங்கள் நடப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.





