சேலத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி என்ற பகுதியில் தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடந்தது. இந்த விழாவில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது, ஹேய் விஜய் வீட்டை விட்டு வெளியே வா பனையூரை விட்டு வெளியே வா என்பவர்களுக்கு என் வீடு எங்கே இருக்கிறது என்பது தெரியுமா? இந்த தமிழ்நாடு என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் மாநிலமாக இருக்கலாம். என்னை பொறுத்தவரை என் தாய்நாடு தமிழ்நாடு தான்.
தமிழ்நாடு தான் என் வீடு. என் வீட்டில் 8 கோடி பேர் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் என் வீட்டு மக்கள். என் குடும்பம். என் உறவு. என் சொந்தம். எனக்கு எல்லாமும் கொடுத்த இந்த சொந்தங்களுக்கு எல்லாமுமாக அவர்களுடன் இருக்கப்போவது இந்த விஜய் மட்டும்தான். ஓட்டு கேட்டு நான் வரவில்லை. உங்களிடம் நீதி கேட்டு வந்திருக்கிறேன்.
காசு கொடுத்து ஓட்டை வாங்கி விடலாம் என்று கனவு காண்கிறார்கள். வண்டி வண்டியாக பணத்தை கொண்டு வந்து கொட்டுவார்கள். அந்த பணத்தை எல்லாம் சந்தோஷமாக வாங்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் எல்லாம் உங்கள் பணம் தான். பணத்தை வாங்கிக்கொண்டு அவர்கள் காதிலேயே விசிலை ஊதி அனுப்புங்கள். நமக்கு எதிராக சரி செய்வது யார், சூழ்ச்சி செய்வது யார், நமக்கு எதிராக பழி போடுவது யார் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
உங்களிடம் நீதி கேட்காமல் நான் வேறு யாரிடம் கேட்பேன்? எந்த கட்சியையும் ஒழிப்பதற்கு நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. மற்றவர்களைப் போல் வெறுப்பு அரசியல் செய்வதற்கும் வரவில்லை. அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில் இருந்துகொண்டு இருப்பவர்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். என்னை மாதிரி சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் ஓட்டு வாங்கி காட்டும் தில்லு அவர்களுக்கு இருக்கிறதா? திராணி இருக்கிறதா?
30 ஆண்டுகால மக்கள் இயக்கமாக இருந்து மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்து, ஆட்சி அதிகாரத்தை இருப்பவர்களை மீறி முதன்மை சக்தியாக தவெக வளர்ந்துள்ளது. 30 சதவீத வாக்குகளை கடந்திருக்கும் நமக்கு அனுபவம் இல்லையா? ஆமாம் எங்களுக்கு கொள்ளை அடிப்பதில் அனுபவம் இல்லை தான். மக்களை நேசிப்பதற்கு நல்ல குணம் இருந்தால் போதும், சூப்பரான நல்லாட்சி கொடுக்கலாம்.
ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத வாக்குறுதிகளை நான் கொடுக்க மாட்டேன். ஆட்சிக்கு வந்த பின்பும் மக்களுக்காக போராட தயாராக இருக்கிறேன். இது தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுக அரசை அகற்ற வேண்டும் என்றால் நாம் திமுகவை தான் எதிர்க்க வேண்டும். மக்கள் விரும்பும் விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா? அவ்வளவுதான் இந்த தேர்தல் என்று நடிகர் விஜய் பேசினார்.





