தமிழ் சினிமாவில் அதிரடி சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் அர்ஜூன். அதனால் அவரை ஆக்சன் கிங் என்றும் அழைக்கின்றனர். மேலும் தேசப்பற்று படங்களில் அதிகமாக அவர் நடித்திருக்கிறார். தனது கையில் தேசியக்கொடியை பச்சை குத்தியிருக்கிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் அர்ஜூன் கூறியதாவது, நான் சினிமாவுக்கு வந்த புதுசுல எனக்கு நடிப்புன்னா என்னவென்றே தெரியாது. என் உடல் ஒன்று தான் அப்போது எனக்கு தகுதியாக இருந்தது. அதே மாதிரி நான் படத்துல புரூஸ்லி மாதிரி ஆக்சன் பண்ண காரணம் 1978ம் ஆண்டில் எங்க மாமா தான் முதல்முறையா புரூஸ்லியோட படத்துக்கு என்னை கூட்டிட்டு போனார்.
அந்த படத்தை பார்த்துட்டு தியேட்டர்ல நான் ஆவேசமா அப்படி கத்தினேன். வீட்டுக்கு வந்தவுடன் நான் கராத்தே கத்துக்கணும்ன்னு அப்பா கிட்ட சொல்லி கராத்தே கிளாஸ்ல சேர்ந்தேன். நான் பார்த்த முதல் ஆக்சன் ஹீரோ புரூஸ்லி தான். ஆனால் அதே மாதிரி அவரோட சண்டை காட்சிகளை தாண்டி அவரோட தத்துவங்களும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
நான் இப்போதும் 62 வயதிலும் நல்ல உடல்கட்டு அமைப்புடன் ஆரோக்கியமாக இருக்க காரணம் உடற்பயிற்சியும் உணவு கட்டுப்பாடும்தான். நீங்களும் தினமும் உடலுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். தினமும் உங்கள் உடலை ஒரு மணி நேரம் கவனித்தால் போதும். அந்த நாளில் மீதம் இருக்கும் 23 மணி நேரமும் உங்களை உடல் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும்.
தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். நான் நடிகன் என்பதற்காகவோ என் தொழிலுக்காகவோ நான் உடற்பயிற்சி செய்யவில்லை. ஆரோக்கியமாக இருப்பது நமக்கானது மட்டுமல்ல. நம்மை சார்ந்து இருப்பவர்களுக்காகவும் தான்.
உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் நிச்சயமாக தேவை. நீங்கள் இல்லாமல் உங்கள் குடும்பம் இல்லை. அதனால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். அதனால் தினமும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள் என்று நடிகர் அர்ஜூன் அந்த நேர்காணலில் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.





