நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். ஆனால் பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை 5 நாட்கள் வரை இருப்பதால் அந்த வாரம் முழுவதும் வசூலை அள்ளலாம் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு ஜனநாயகன் படத்தை ஜனவரி 9ம் தேதி என அறிவித்தது.
ஆனால் வேறு மாதிரி நிலைமை மாறிவிட்டது. சென்சார் பிரச்னையால் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் அந்த படம் இன்று வரை ரிலீஸ் ஆகவில்லை. இன்னும் ரீவைசிங் கமிட்டி ஜனநாயகன் படத்தை பார்க்காத நிலையில் பிப்ரவரி மாதம் இறுதி வரை ஜனநாயகன் படம் ரிலீஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை.
வருகிற மார்ச் மாதம் பள்ளிகளில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஏப்ரல் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் களைகட்டி விடும். தேர்தல் பிரசார நேரத்தில் படத்தை வெளியிட முடியாது. தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்து விட்டால் தவெக கட்சி தலைவர் விஜய் நடித்த படம் திரைக்கு வர முடியாது. தேர்தல் ஆணையம் விதிகளின்படி அதற்கு அனுமதி இல்லை.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் தற்போது ஜனநாயகன் படம் வருகிற ஜூன் மாதம் ரிலீஸ் என்று தெரிய வந்துள்ளது. அதில் ஜூன் 22ம் தேதி நடிகர் விஜயின் பிறந்த நாள் என்பதால் அந்த வாரத்தில் மொகரம் பண்டிகை வருகிறது. தொடர்ந்து சனி ஞாயிறு என வார விடுமுறை தினங்களும் வருவதால் ஜூன் 25ம் தேதி ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் மொகரம் பண்டிகை மற்றும் சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் 5 காட்சிகள் என தினமும் திரையிட வாய்ப்புள்ளது. ஏற்கனவே தவெக தலைவர் விஜய்க்கும் திமுக அரசுக்கும் கடும் மோதல் நீடித்து வரும் நிலையில் ஜனநாயகன் படத்துக்கு சிறப்பு காட்சிகள் தர திமுக அரசு அனுமதிக்காது என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.
ஒருவேளை வருகிற தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் இதே போன்ற ஒரு சிக்கலை தவெக கட்சி தலைவரான விஜய் சந்திக்க நேரிடும். ஒருவேளை தவெக கட்சி மாபெரும் வெற்றி பெற்று விஜய் தமிழக முதல்வரானால் ஜனநாயகன் படத்துக்கு தினமும் 5 காட்சிகள் திரையிடுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று ஒரு கருத்தும் பரவி வருகிறது.





