தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போல கடந்த 1980களில் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் ராமராஜன். மக்கள் நாயகன் என்று அழைக்கப்பட்ட அவரது படங்கள் ரஜினி கமல் படங்களை விட அதிக வசூலை குவித்தன என்றால் அது மிகையல்ல. அந்தளவுக்கு ராமராஜன் நடிகராக பெரிய வரவேற்பை பெற்றார்.
நடிகர் ராமராஜன் நடித்த படங்கள் எல்லாமே கிராமத்து கதைக்களத்தில் உருவான குடும்ப பின்னணி படங்கள்தான். இந்த படங்களில் இளையராஜா இசை கவுண்டமணி செந்தில் காமெடி இருந்தாலே அந்த படங்கள் சில்வர் ஜூப்ளி என்கிற அளவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களின் நாயகனாக ராமராஜன் கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.
ரஜினி கமலுக்கு ஜோடியாக நடித்த கௌதமி ரூபிணி சீதா ரேகா போன்ற பல முன்னணி நடிகைகள் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்தனர். எளிமையான திரைக்கதையில் உருவான ராமராஜன் படங்கள் மக்களுக்கு பொழுதுபோக்கான ஜனரஞ்சகமான படங்களாக அமைந்தன. அதிலும் எங்க ஊரு பாட்டுக்காரன் கரகாட்டக்காரன் போன்ற படங்கள் ராமராஜின் பெயர் சொல்லும் படங்களாக இன்றும் இருக்கின்றன.
எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் பாட்டு பாடி காளையை அடக்கும் கேரக்டரில் ராமராஜன் நடித்திருந்தார். அதே போல் கரகாட்டக்காரன் படத்தில் கரகாட்டம் ஆடும் கலைக்கூத்தாடியாக அவர் நடித்திருந்தார். இந்த 2 படங்களிலும் அவர் நடித்து மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதால் தான் கிராமத்து நாயகன் மக்கள் நாயகன் என்றே அவர் அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ராமராஜன் கூறியதாவது, திருவிழா இருக்கிற வரைக்கும் கரகாட்டம் கண்டிப்பாக இருக்கும். அந்த கரகாட்டம் ஆடுகிற வரைக்கும் என் நினைவு மக்களுக்கு இருக்கும். அதைப்போல ஊர் உலகம் இருக்கிறவரைக்கும் பசு மாடு இருக்கும். பசு மாடு இருக்கிற வரைக்கும் என் நினைப்பும் மக்களுக்கு இருக்கும்.
இப்படி ஒரு பெரும் பாக்கியத்தை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார் என்று நடிகர் ராமராஜன் நெகிழ்ச்சியாக அதில் கூறியிருக்கிறார். புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் மிக தீவிரமாக ரசிகரான ராமராஜன் எம்ஜிஆரை போலவே தனது படங்களில் புகை பிடித்தல் மதுபானம் குடித்தல் போன்ற காட்சிகளில் நடிக்காமல் தவிர்த்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது.





