சமீபத்தில் அதிமுக கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், திமுக ஆட்சி குறித்தும் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் விமர்சனம் செய்து பேசினார். அப்போது உங்கள் கனவுகளை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். அப்படி சொன்னால் ஆசைகளை நிறைவேற்றி விடுவாரா? என்று பேசினார்.
மேலும் நடிகை நயன்தாராவை ஆசைப்படுகிறோம். அவரை திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்பட்டால் அதை அவர் நிறைவேற்றி தருவாரா என்றும் விவகாரமாக பேசியிருந்தார். இது பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில் பலரும் இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் இதற்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் விஷால் அதில் கூறியிருப்பதாவது, சிவி சண்முகம் சார் சமீபத்தில் உங்கள் கட்சி மீட்டிங்கில் எங்கள் துறையை சார்ந்த ஒரு பெண்மணி ஒரு கதாநாயகி பற்றி நீங்கள் தரக்குறைவாக பேசி இருக்கிறீர்கள். அவர் ஒரு நடிகை அதுமட்டுமின்றி அவர் திருமணமானவர். மேலும் இந்திய சினிமாத்துறையில் மிகவும் பிரபலமானவர்.
ஒருவரை கொச்சைப்படுத்தி பேசி நீங்கள் கைதட்டல் வாங்க வேண்டும் என்கிற எந்த அவசியமும் கிடையாது. ஆனால் இந்த மாதிரி மோசமான வார்த்தையை அந்த நடிகை பற்றி பேசியது தவறு. நீங்கள் ரொம்பவும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கீங்க. தயவுசெய்து உங்களுடைய மரியாதையை கெடுத்துக்காதீங்க.
சமுதாயத்தில் பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அது மனதில் இருந்து வர வேண்டும். அது உங்களுக்கும் வர வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். எங்கள் துறையை சேர்ந்த பெண்மணிகள் குறித்து தவறாக பேசுவதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.
சக நடிகையாக இருக்கலாம். ஏன் உங்கள் கட்சியை சார்ந்த ஒரு பெண்மணியாக கூட இருக்கலாம். அப்படி அவர்களைப் பற்றி நீங்கள் இந்த மாதிரி பேசும்போது கூட நான் கண்டிப்பாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிடுவேன். தயவுசெய்து இந்த மாதிரி இனிமேல் செய்யாதீங்க சார் என்று அந்த வீடியோவில் நடிகர் விஷால் கூறியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





