காமெடி நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி இயக்கத்தில் உருவான படம் டி என் 2026. இந்த படம் வருகிற 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் அதில் தவெக தலைவர் நடிகர் விஜய் குறித்து கிண்டல் செய்து மட்டம் தட்டி தாக்கும் காட்சிகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
அது குறித்து டிஎன் 2026 படத்தின் கதாசிரியர் காமெடி நடிகர் தம்பி ராமையா கூறியதாவது, 18 வயசு ஆகி விட்டால் ஓட்டு போட வேண்டுமா என்கிற காலம் போய் ஓட்டு போடுவதற்காக 18 வயசு ஆக வேண்டும் என்று காத்திருக்கும் அளவுக்கு சமூகம் வளர்ச்சி அடைந்து விட்டது. வீட்டை விட்டு வெளியே சென்றால் ஒரு இடத்திலாவது அரசியல் பேச்சு கேட்காமல் வீடு திரும்ப முடியாது.
அரசியல் முதிர்வு என்பது 14, 15 வயதிலேயே கிடைத்து விடுகிறது. எம்ஜிஆர் பாடல் கொடுத்த ஈர்ப்பால் அவரது வரலாற்றை அலசி ஆராய தொடங்கினேன். இதுகுறித்து நிறைய தகவல்களை சேகரித்தேன். கருணாநிதியும் எம்ஜிஆரும் எப்படி ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். ஆனால் தற்காலத்து பிள்ளைகள் உடனடியாக கிடைக்கும் விஷயத்தை மட்டுமே விரும்புகின்றனர்.
அவர்களுக்கு வரலாற்றை புரிய வைக்க வேண்டும் என்று விரும்பினேன். இப்படி பல வருட கால வரலாற்றை ஒரு கதைக்குள் கொண்டு வந்து படத்தை எடுக்க வேண்டும் என்று யோசித்தேன். என் வயதுக்கும் முதிர்வுக்கும் தகுந்தபடி நான் நடிக்கிறேன். நான் சம்பாதித்தேன் என்று இல்லாமல் சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதற்காக எழுதப்பட்ட படம் தான் டிஎன் 2026.
இந்த இரண்டு மாதங்களில் நடந்தவை படத்தில் காட்சியாக்கப்பட்டு உள்ளது. நாங்கள் எழுதிய ஒரு சில காட்சிகள் இப்போது உண்மையாக நடந்து கொண்டிருக்கிறது என்பதே எங்களுக்கும் வியப்பாக தான் இருக்கிறது. ஜென்ஸி கிட்ஸ்க்கு புரிவது போல் படம் அமைய வேண்டும் என்பதில் படத்தின் இயக்குனர் என் மகன் குறியாக இருந்தான்.
விஜய் ஒரு இரவில் எல்லாம் அரசியலுக்கு வந்திருக்க முடியாது. அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் 100 எம்எல்ஏக்களுக்கு சமம். இந்த படம் பல கால கட்டத்தில் நடந்ததன் ஒரு தொகுப்புதான். முழுமையாக படத்தை பார்க்காமல் இந்த படம் இப்படித்தான் என்று இப்போது முடிவுக்கு வர வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த நேர்காணலில் நடிகர் தம்பி ராமையா கூறியிருக்கிறார்.





