தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர் சி. மேலும் பல படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இயக்குனர் சுந்தர் சியின் மனைவி நடிகை குஷ்பு ஏற்கனவே அரசியல் களத்தில் உள்ள நிலையில், இப்போது அவரது கணவர் சுந்தர் சியும் தமிழக அரசியல் களத்தில் குதித்து இருக்கிறார்.
மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சி வேட்பாளராக அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பிடிஆர் என அழைக்கப்படும் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து சுந்தர் சி களத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர் மணிகண்ட ராமன் என்பவர் அளித்துள்ள அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கலகலப்பு 3 படத்துக்காக இயக்குனர் சுந்தர் சி யை அணுகினேன். அப்போது அவர் படத்துக்கு 20 கோடி ரூபாய் பட்ஜெட் என்றும் தனக்கு சம்பளமாக 5 கோடி ரூபாய் என்றும் கூறினார். இதுகுறித்த பேச்சுவார்த்தை உறுதி செய்யப்பட்டு சுந்தர் சி எங்கள் நிறுவனத்துடன் கலகலப்பு 3 படத்தை இயக்க ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டார். இதையொட்டி அவருக்கு 50 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டது.
மேலும் நடிகர்கள் நடிகைகளுக்கும் முதல் கட்ட சம்பள விநியோகம் என 59 லட்சம் ரூபாய் வரை கொடுக்கப்பட்டது. ஆனால் கூறியபடி சுந்தர் சி சொன்ன தேதியில் கலகலப்பு 3 படத்தை இயக்கவில்லை. இந்த சூழலில் அவரது இயக்கத்தில் உருவான அரண்மனை 4 படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வெற்றி பெற்ற வேகத்தில் இருந்த இயக்குனர் சுந்தர் சி, எங்கள் படத்துக்கான பட்ஜெட் தொகையை 30 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டார். மேலும் தனது சம்பளமாக 10 கோடி ரூபாய் என்றும் நிபந்தனை விதித்தார்.
இது குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. கலகலப்பு 3 படம் எடுக்க வேண்டாம் என்று முடிவுக்கு வந்து, வாங்கிய முன் தொகையை திருப்பிக் கொடுக்குமாறு சுந்தர் சி யிடம் கேட்டுக் கொண்டோம். ஆனால் முன்பன தொகையை கொடுக்காமல் இயக்குனர் சுந்தர் சி எங்களை மிரட்டி வருகிறார். அவர் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் திரைப்பட தயாரிப்பாளர் மணிகண்ட ராமன் கூறியிருக்கிறார்.
இயக்குனர் மற்றும் வேட்பாளர் சுந்தர் சி மீது பண மோசடி புகார் கொடுக்கப்பட்ட விவகாரம் கோலிவுட் வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தற்போது எதிர்க்கட்சிகளுக்கு சுந்தர் சி மீது பிரசாரத்தில் குற்றச்சாட்டை எழுப்பி விமர்சனங்களை வைக்க ஒரு முக்கிய வாய்ப்பாகவும் அமைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





