மாதம் இருமுறை வெளியாகும் ஒரு சினிமா பத்திரிகை சார்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. பாட்ஷா மற்றும் முத்து ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக ரஜினிக்கு அந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழா கடந்த 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடந்தது.
இந்த விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் பங்கேற்றார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் கருப்பு நிற பேண்ட் சர்ட்டில் மொட்டை தலையுடன் காணப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரஜினி எங்கு வந்தாலும் அவர் ஹேர் ஸ்டைலை பார்த்து தான் ரசிகர்கள் சந்தோசப்படுவார்கள்.
திடீரென அவர் மொட்டை தலையுடன் வந்ததை பார்த்து விழாக்குழுவினரே ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். அங்கிருந்த ரசிகர்களுக்கும் பலத்த குழப்பம் ஏற்பட்டது. அப்போது அந்த விழாவில் பேசிய போது நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, ஏன் இவர் திடீரென மொட்டை அடித்திருக்கிறார் என்று என்னை பார்ப்பவர்கள் எல்லாரும் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள்.
ஆனால் இது நானாக ஆசைப்பட்டு அடித்துக் கொண்ட மொட்டை இல்லை. தானாக தேடி வந்த முட்டை. நியூயார்க்கில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தேன். அப்போது ஒரு பத்திரிகையை படித்தேன். லேட்டஸ்ட் ஸ்டைலில் முடி வெட்டக் கொள்ள போன் பண்ணவும் என்று அதில் விளம்பரம் இருந்தது. லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைல் என்கிறார்களே, வெட்டி தான் பார்க்கலாம் என்று எனக்கு ஆசை வந்தது.
அந்த நம்பருக்கு போன் பண்ணினேன். உடனே அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை. 3 நாட்களாக போராடி முயற்சி செய்துதான் அந்த அப்பாயின்ட்மென்ட் கிடைத்தது. அதன்பிறகு நான் நேரில் போனேன். முதலில் என் தலைக்கு மசாஜ் செய்தார்கள். மசாஜ் செய்தது சுகமாக இருந்தது. பிறகு என்னை முடிவெட்டும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். முடி வெட்டும் போது அந்த சுகத்தில் அப்படியே நான் தூங்கி விட்டேன்.
திடீரென்று பிளைட்டில் போகிற மாதிரி சத்தம் கேட்டது. கண்களை திறந்து பார்த்தால் என் தலையில் இருந்த முடியெல்லாம் காணோம். இப்போ பாருங்க. உங்கள் ஹேர்ஸ்டைல் எப்படி இருக்கிறது, எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள். இதுதான் நியூயார்க்கில் லேட்டஸ்ட் ஹேர்ஸ்டைல் என்றார்கள். அதற்கு 120 டாலர் வாங்கினார்கள். என் தலையில் மொட்டை அடித்ததற்கு 4000 ரூபாய் வசூலித்து விட்டார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.





