நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து பிரிந்துள்ள நிலைில் அவர்களது விவாகரத்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே ரவி மோகன் – பாடகி கெனிஷா நெருக்கமான நட்பில் இருந்தது இணையத்தில் தீயாக பரவியது. இதனால் ஆர்த்திக்கு ஆதரவாகவும் கெனிஷாவுக்கு எதிராகவும் அவதூறுகள் கிளம்பியது. ஆர்த்தி குறித்து அவதூறுகளை வெளியிடக்கூடாது என சமீபத்தில் கோர்ட் எச்சரித்தது. இந்த சூழலில் பாடகி கெனிஷா வீடியோ ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அந்த வீடியோவில் தனது கண்ணீர் நிறைந்த கடந்த கால வாழ்க்கையை வெளிப்படையாக பகிர்ந்து கெனிஷா கூறியிருப்பதாவது, என்னுடைய பெயர் கெனிஷா. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த நான் 4ம் வகுப்பு படிக்கும் போதே 9 வயதில் எனது உறவினர் ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். விவரம் தெரியாத 18 வயதில் எனக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் என் கணவருடன் தோழிகள் என்ற பெயரில் 10, 15 பெண்கள் உறவில் இருந்தனர். அவருடன் சில மாதங்களே நான் வாழ்ந்த நிலையில் நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தேன். அப்போது என் கணவர் என்னை கோபத்தில் கொடூரமாக தாக்கியதால் பனிக்குடம் உடைந்து என் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டது. நான் அந்த நரக வாழ்க்கையில் இருந்து வெளியே வந்து அடுத்த 10 ஆண்டுகளில் என் சொந்தக்காலில் நின்றேன்.
நெட்டிசன்கள் விமர்சிப்பது போல் ஆரம்பத்தில் 500 ரூபாய் சம்பளத்திற்காக பாரில் பாடல்களை பாடி தான் என் பயணத்தை தொடங்கினேன். அதில் என்ன தவறு? இன்று பெரிய இசை நிகழ்ச்சிகளில் பாடும் நிலைக்கு நான் உயர்ந்துள்ளேன். இந்த வளர்ச்சிக்கு நான் யாரிடமும் சமரசம் செய்து கொள்ளவில்லை. எனக்கு 5 குழந்தைகள் உள்ளனர். என்னுடைய பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளேன் என்று அறிவின்றி சிலர் பேசுகிறார்கள்.
நான் ரவிமோகனை சந்தித்த போது அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு கடினமான காலகட்டத்தில் இருந்தார். ஒரு தெரபிஸ்ட் ஆக அவருக்கு என்னால் முடிந்த அறிவுரைகளை வழங்கினேன். அவ்வளவுதான். வயிற்றிலேயே ஒரு குழந்தையை இழந்த துரோகத்தை அனுபவித்த நான் ரவி மோகனின் குடும்பத்தை கெடுக்க நினைப்பேனா? அவர் ஒன்றும் குழந்தை கிடையாது. தன் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவரே தான் முடிவு எடுக்க வேண்டும்.
இதில் என்னை ஏன் இழுக்கிறீர்கள்? நானும் ரவி மோகனும் உங்கள் கண் முன்னே தான் இருக்கிறோம். எங்கும் ஓடிப்போகவில்லை. சமூகத்தில் மக்களின் உண்மையான பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. அதைப்பற்றி பேசுங்கள். தயவு செய்து உங்கள் சொந்த வாழ்க்கையில், முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள் என்று பாடகி கெனிஷா அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





