பருத்திவீரன் மௌனம் பேசியதே ராம் உள்ளிட்ட நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர் இயக்குனர் அமீர். வடசென்னை உள்ளிட்ட சில படங்களில் அமீர் நடித்தும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். இந்நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து தனது எக்ஸ் பதிவில் அமீர், என்று தணியும் இந்த சினிமா மோகம்? உங்கள் அரசியல் விளையாட்டுக்கு அப்பாவி குழந்தைகள் பலியா? கரூரில் இறந்தவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். எத்தனை உயிர்களை காவு வாங்கி ஆட்சியில் அமர்வீர்கள் என்று காட்டமாக பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் அமீர் கூறியதாவது, விஜய் உச்ச நடிகர் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அவர் தனது வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததை நான் வரவேற்கிறேன். ஆனால் அவர் வந்ததும் நாட்டை கொடுக்க வேண்டுமா என்பதைத்தான் நான் விமர்சிக்கிறேன்.
அவர் மக்களுடன் இன்னும் கலந்து கொள்ள வேண்டும். மக்களிடமும் அரசியலிலும் சுக துக்கங்களில் அவர் இன்னும் கலந்து கொள்ள வேண்டும். இந்த நாடு எதை நோக்கி போகிறது? இந்த நாட்டுக்கு என்ன அரசியல் தேவையானது என்பதையும் அவர் கலந்துகொள்ள வேண்டும். திருமாவளவன் கரு பழனியப்பன் உள்ளிட்டோர் கடுமையாக விஜயை விமர்சிக்கின்றனர்.
அந்த விமர்சனத்தில் இருந்து விஜய் தன்னை சரி செய்து கொள்ள வேண்டும். பலரும் விஜயை கடுமையாக திட்டுவது என்பது விஜயை சரி செய்வதற்கு தான் என்றுதான் நான் பார்க்கிறேன். கரூர் சம்பவம் குறித்து 16வது நாள் காரியம் முடிந்த பின்னர் நான் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட முடியும். எது அறிவுபூர்வமானது? ஆனால் ஆதவ் அர்ஜூன் அதுபோல பேசிவிட்டு செல்கிறார். அவர் சொல்வது என்ன வேதவாக்கா? பத்திரிகையாளர்கள் எதுவும் சொல்லாதது அதிர்ச்சியாக இருக்கிறது.
யாருக்கும் அவரது தகப்பன் கெட்டது நினைக்க மாட்டார்கள். விஜயின் வலது புறத்திலும் இடதுபுறத்திலும் இருப்பவர்கள் சரியானவர்களாக இல்லை. விஜய் தனது அப்பாவை விலக்கி வைத்துவிட்டு அவருக்கு நல்ல அறிவுரைகள் சொல்லக்கூடிய தலைவர்கள் இல்லாதது குறைதான். கரூர் சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்காமல் அதில் தமிழக அரசு மீது குற்றம் சாட்டுவது சரியில்லை. ஊடகங்களில் பேசிய கருத்துக்களை நீதிமன்றத்தில் பேசவில்லை ஏன்?.
விஜய் மாநாட்டில் பேசும்போது கூட கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மற்றவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். இது என்ன மாதிரியான அணுகுமுறை? இது ஆபத்தானது. கரூர் துயர சம்பவம் தொடர்பாக விரைவில் தீர்ப்பு வந்துவிடும். அதன் பின்னர் இதுகுறித்து விலாவாரியாக பேசலாம் என்று இயக்குனர் மற்றும் நடிகர் அமீர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.





