தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜாவின் தம்பி என்ற அடையாளம் கொண்டவர் கங்கை அமரன். ஆனால் இவரும் இசை திரைப்பட இயக்குனர் பாடல் ஆசிரியர் பாடகர் நடிகர் என பன்முக தன்மை கொண்ட சிறந்த கலைஞர் என்றால் அது மிகையல்ல. பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் கங்கை அமரன் என்பது பல ரசிகர்களுக்கு தெரியாது.
இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு கிராமத்து படம் தான் கரகாட்டக்காரன். தில்லானா மோகனாம்பாள் படத்தின் 1990 கால வெர்சன்தான் இது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. எனினும் ராமராஜன் நாயகனாக நடித்த இந்த படத்தில் கனகா நாயகியாக அறிமுகமானார்.
மாபெரும் வெற்றியை கரகாட்டக்காரன் பெற்றது. முதல் படமே கனகாவுக்கு பெரிய வரவேற்பை அடையாளத்தை தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. தொடர்ந்து ரஜினி விஜயகாந்த் பிரபு கார்த்திக் என நட்சத்திர ஹீரோக்களுக்கு கனகா ஜோடியாக நடித்தார். அவர் கரகாட்டக்காரன் படத்தில் தேர்வாக காரணமே தன் மனைவிதான் என்று கங்கை அமரன் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இசையமைப்பாளர் மற்றும் கரகாட்டக்காரன் படத்தின் இயக்குனர் கங்கை அமரன் கூறியதாவது, எங்கள் வீட்டுக்கு பக்கத்து தெருதான் கனகாவின் வீடு. கனகாவும் அவங்க அம்மாவும் எங்கள் வீட்டு வழியாக உள்ள தெருவில்தான் தினமும் வாக்கிங் போவார்கள். வாக்கிங் வர்றவங்க யாராவது பட்டுப்பாவாடை தாவணி போட்டுட்டு தலை நிறைய பூ வெச்சுக்கிட்டு வருவாங்களா?
ஆனா அவங்க அம்மா கனகாவை அப்படி கூட்டீட்டு வர்றாங்க. அவங்க அப்படி தான் நடந்து வர்றாங்க. அப்போ அவங்களை பார்த்து, எங்கே இந்த பக்கம் என்க, அவர்களும் வாக்கிங் போறோம் என்றனர். அடடே அப்படியா, இதுதான் நம்ம வீடு வாங்க என்று அவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போய் காபி எல்லாம் கொடுத்து உபசரித்தோம்.
அவர்கள் போன பிறகு என் மனைவிதான் என்னிடம் சொன்னார். இந்த பொண்ணு அழகா இருக்குதே, கரகாட்டக்காரன் படத்துல இந்த பெண்ணையே நடிக்க வைங்க என்று அவர்தான் சொன்னார். அவரோட சிபாரிசில் தான் கனகா கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் என்று கங்கை அமரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





