இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படுதோல்வியை சந்தித்த திரைப்படங்களுள் ஒன்று கங்குவா திரைப்படம். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ரசிகர்கள் அனைவரும் இந்த பாஸ்ஸை பத்திரமாக வைத்திருங்கள், டிசம்பர் மாதம் வெற்றி விழாவில் கூடும்போது இது தேவைப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டுதான் ரசிகர்கள் கங்குவா திரைப்படத்தை கழுவி ஊற்றினார்கள். சிறுத்தை சிவா இயக்கி இருந்த இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக அடி வாங்குவதற்கு மிக முக்கிய காரணம் அதன் திரைக்கதை எழுதப்பட்ட விதம்தான். அதில் எந்த ஒரு சுவாரசியமும் இல்லை என்று ரசிகர்கள் கூறினார்கள்.
முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி இரண்டுமே மட்டமாக இருப்பதாகவும், எதற்கு இதற்கு இந்த அளவு பில்டப் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். அதேசமயம் மற்றொரு பக்கம் பலர் இந்த அளவு கலாய்க்கும் அளவுக்கு அந்த திரைப்படம் இல்லை என்றும் இணையத்தில் வாதிட்டனர்.
கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் அளவுக்கு இந்த திரைப்படம் எடுக்கப்பட்ட நிலையில், வெறும் 80 கோடி ரூபாய் அளவுக்கு கூட கங்குவா வசூல் ஈட்டவில்லை என்று கூறுகின்றனர். இதனை ஆரம்பத்தில் பலரும் கலாய்த்த போது பொங்கி எழுந்த ஜோதிகா, மற்ற திரைப்படங்கள் பற்றி ரசிகர்கள் இது போல் பேசுவார்களா என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால் திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகும், சறுக்கலையே சந்தித்தது. இது ஒரு பக்கம் இருக்க தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் சூர்யா. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் 44 வது திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகிறது. இதற்கு ஜானி என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் சூர்யாவின் 45 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இதனை ஆர்ஜே பாலாஜி இயக்க திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனிடையே கங்குவா திரைப்படத்தின் தோல்வி குறித்து அதில் நடித்திருந்த நட்டி நட்ராஜ் பேசியிருக்கிறார். பலரும் கங்குவா படத்தின் முதல் பாகத்தை பார்த்து விட்டு விமர்சிக்கிறார்கள். ஆனால் இரண்டாம் பாகம் வெளியாகினால் அது பலருக்கும் பிடிக்கும். கங்குவா 2 வெளியாகும் போது தான் அதன் அருமை பலருக்கும் தெரியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.





