தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் எஸ்வி சேகர். ஆயிரக்கணக்கான நாடகங்களை மேடையில் அரங்கேற்றம் செய்த நாடக கலைஞர். திமுக ஆதரவாளராக இருக்கும் எஸ்வி சேகர், தவெக குறித்தும் விஜய் குறித்தும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார். விஜய் முதல்வர் ஆவார் என்பது வெறும் கனவுதான் என்றும் கூறினார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய் குறித்து நடிகர் எஸ்வி சேகர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, நடிகர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகி இப்போது மந்திரி சபையும் அமைத்து விட்டார். திருமாவளவனின் விசிக கட்சி சார்ந்த ஒரு எம்எல்ஏவுக்கும் அமைச்சர் பதவி விஜய் கொடுத்துள்ளார்.
விஜய் ஆட்சியமைப்பாரா, மாட்டாரா? தவெக ஆட்சி வருமா, வராதா? இவர் எல்லாம் ஜெயிக்கறது ரொம்பவும் கஷ்டம். மேஜிக் நம்பர் வருமா, வராதா? என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தனர். என்னுடைய 8 வயசு பேரன் கூட தாத்தா, 118 மேஜிக் நம்பர் வந்துவிட்டதா என்று என்னிடம் கேட்கிறான்.
அந்த மாதிரி இப்போது விஜய் என்கிற பெயர் மேஜிக் நேம் ஆக மாறிவிட்டது. நானும் இன்னும் பல பேரும் விஜய் ஜெயித்தால் அதிகபட்சம் 2 அல்லது 3 சீட் ஜெயிக்கலாம். அதற்கு மேல் எல்லாம் வாய்ப்பில்லை என்றுதான் பேசினோம். ஏனென்றால் எனக்கு 75 வயது ஆச்சு. நான் பார்த்த அரசியல் வேற. இத்தனை வருஷமா நான் பார்த்த அரசியலை வெச்சுத்தானே நான் கணிக்க முடியும்?
நான் என்ன படிச்சேனோ அந்த அறிவில் இருந்து தானே நான் உபயோகப்படுத்த முடியும். எல்லாத்தையும் அப்படியே புரட்டிப் போட்ட மாதிரி ஒரு மேஜிக் பண்ணிய மாதிரி ஆகி விட்டது. இன்று இந்தியா முழுக்க குடும்பத்தினர் தமிழ் டிவி சேனல்களில் ஜோசப் விஜய் என்கிற பெயரை பார்க்கிற மாதிரி ஒரு மேஜிக்கை விஜய் உண்டாக்கி விட்டார்.
ஏன் இப்படி தப்பாக கணித்தோம் என்றால் நான் ஜோசியன் கிடையாது. ஆனால் எனக்கு பல ஜோதிடர்களை தெரியும். அதில் 2 ஜோதிடர்கள் சொன்னது தவிர மற்ற ஜோதிடர்கள் சொன்னது எல்லாமே தப்பாக தான் போச்சு என்று நடிகர் எஸ்வி சேகர் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். விஜயை தாறுமாறாக விமர்சித்த நடிகர் எஸ்வி சேகர் இன்று அப்படியே மாற்றி பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.





