பொதுவாக சினிமாவில் நடிக்கும் ஹீரோக்களின் சம்பளம் 100 கோடி 200 கோடி ரூபாய் என கடந்து விட்டது. ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் பிரபாஸ் அல்லு அர்ஜூன் ஷாருக்கான் சல்மான்கான் அமீர்கான் போன்றவர்கள் வாங்கும் சம்பளம் எல்லாமே அந்த அளவில்தான் உள்ளது. ஆனால் நடிகைகளின் சம்பளம் இன்னும் மிக குறைவாக உள்ளது. 10 கோடி முதல் 20 கோடி ரூபாய்தான் அவர்களது அதிகபட்ச சம்பளம் என்று சொல்லப்படுகிறது.
மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் சென்னை 28 ஜில்லா விவேகம் நான் மகான் அல்ல மாற்றான் துப்பாக்கி மாரி மெர்சல் கோமாளி என பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். இந்தியிலும் பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய சினிமா துறையில் ஆண் பெண் நடிகர்களின் சம்பள வித்தியாசம் மிகப்பெரிய அளவில் உள்ளது. கண்டிப்பாக அது மாற்றப்பட வேண்டும் என்று நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கூறியிருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய போது நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது, தற்போது திரையுலகில் ஆண் மற்றும் பெண் நடிகர்களுக்கு இடையே நிலவும் சம்பள பாகுபாடு குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து இன்னும் பல நடிகர்கள் பேசுவார்கள் என்று நம்புகிறேன்.
சினிமா துறையில் நடிகர் நடிகைகள் இடையே சம்பள பாகுபாடு இல்லை என்று சொல்லிவிட முடியாது. இந்த நிலை மாற வேண்டும். மாற்றங்கள் மெதுவாக நடந்து வருகின்றன. சினிமாத்துறை இப்போது பெருமளவில் கார்ப்பரேட் மயமாகி விட்டது. இந்த ஆட்டத்தின் விதிகளையை மாற்றி இருக்கிறது. இருந்தாலும் ஆண் மற்றும் பெண் நடிகர்களின் சம்பளத்திற்கு இடையே இருக்கும் வித்தியாசம் மிகப்பெரியதாக உள்ளது.
எனக்கு தென்னிந்திய சினிமா துறை மீது கூடுதல் ஈர்ப்பு உண்டு. ஏனென்றால் அங்குதான் நான் என்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினேன். அங்கு 9 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்வதில்லை. பாலிவுட்டில் எனக்கு கிடைக்காத ஒரு சௌகரியம் தென்னிந்திய சினிமாவில் கிடைக்கிறது. ஒழுக்கம் மற்றும் நேரத்தை சரியாக கடைபிடித்தல் ஆகியவற்றுடன் பெண்களுக்கு மிகுந்த மரியாதையும் அங்கு தரப்படுகிறது என்று நடிகை காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.





