தமிழ் சினிமா ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தற்போது மக்கள் மேடை அதாவது சிட்டிசன் பிளாட்பார்ம் என்ற புதிய இயக்கம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று பல ஆண்டுகளாக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அவரது மனைவி லதா புதிய இயக்கம் துவங்கியிருக்கிறார்.
நடிகர் விஜய் தவெக என்ற அரசியல் கட்சி துவங்கி தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து லதா ரஜினிகாந்த் இந்த அதிரடி முடிவு எடுத்திருப்பது பலரிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டைமாறன் லதா ரஜினிகாந்துக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பி தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். இது வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி சமூக ஆர்வலர் லதா ரஜினிகாந்த் மக்கள் மேடை என்ற புதிய இயக்கத்தை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருக்கிறார்.
இந்த இயக்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், பொதுமக்கள் அனைவரும் இந்த அமைப்பில் இணைந்து சமூகத்திற்கு பல நன்மைகளைச் செய்ய முன்வர வேண்டும். மேலும் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவர்களுக்கு என தனியாக மொபைல் எண் கொடுத்திருந்தார்.
மேலும் அந்த வீடியோவில், இது உங்களுக்கான தளம். பெரும் மக்கள் சேவையால் மக்கள் சக்தியாக உருவெடுத்து இந்த சமூகத்துக்கு பல்வேறு நன்மைகளை செய்ய நாம் முன்வர வேண்டும். மூத்த குடிமக்கள் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என யாராக இருந்தாலும் உங்களை அனுபவத்தை இந்த மேடைக்கு கொண்டு வரலாம்.
இதன் மூலம் உள்ளூர் அளவில் புதிய தலைவர்களை நாங்கள் உருவாக்க விரும்புகிறோம் என்றும் லதா ரஜினிகாந்த் பேசியிருந்தார். இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை செய்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இதுவரை உங்களது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் எத்தனை ஏழை எளிய மக்கள் இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் திருமணம் செய்துள்ளனர்?
உங்களது ஆஷ்ரம் பள்ளியில் ஏழை மாணவர்கள் அதிகமா அல்லது பணக்கார மாணவர்கள் அதிகமா? இப்போது விஜய் ஜெயிச்சதும் மக்கள் மீது உங்களுக்கு திடீர் பாசம் ஏன் என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி வருகிறது. எதிர்காலத்தில் இது நிச்சயமாக அரசியல் இயக்கமாக, விஜய்க்கு போட்டியாக மாறும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.





