இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் புது நாத்து புதுநாத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நெப்போலியன். தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழில் ஒரு நட்சத்திர நடிகராக நெப்போலியன் வலம் வந்தார். தொடர்ந்து கேப்டன் மகள் கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட படங்களிலும் பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடித்திருந்தார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவு குறித்து அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் வசித்து வரும் நடிகர் நெப்போலியன் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் நெப்போலியன் கூறியிருப்பதாவது, என் குருநாதர் பாரதிராஜா இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி வந்ததும் முதலில் என்னால் அதை நம்பவே முடியவில்லை.
சில மாதங்களாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார், இருந்தாலும் இது ஒரு வதந்தி தான் என்று நினைத்தேன். ஏனென்றால் ஒரு மாதத்திற்கு முன்பு கூட இதே போன்ற ஒரு தகவல் வெளியானது. அப்போது அவருடைய மகள் ஜனனியிடம் ஃபோனில் பேசினேன். அப்பா நல்லா இருக்கிறார் அங்கிள். யாரோ வதந்தி பரப்புகிறார்கள் என்று சொன்னார்.
அதனால் இந்த முறையும் அதே மாதிரி வதந்தியாக இருக்கும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் ஜனனியை போனில் அழைத்துப் பேசியபோது மலேசியாவில் இருந்து இந்தியா வந்து கொண்டிருக்கிறேன் அங்கிள். இப்போது விமான நிலையத்தில் இருக்கிறேன். அப்பா இறந்து விட்டார் என்று அவர் கூறிய பிறகுதான் நான் மிகவும் வேதனை அடைந்தேன். நான் உட்பட என் குடும்பத்தில் யாராலும் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நேற்று இரவு முழுவதும் பாரதிராஜா பற்றிய செய்திகளையே டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன். தூக்கமே வரவில்லை. என்னுடைய சினிமா பயணத்தில் மிக முக்கிய பங்கு வகித்தவர் என் குருநாதர் பாரதிராஜா. எனது வாழ்க்கையில் எல்லாமே குருநாதர் பாரதிராஜா தான். எனக்கு சினிமா என்றால் என்னவென்று தெரியாது. நடிப்பு என்றால் என்னவென்று தெரியாது. எனக்கு எல்லாம் கற்றுக் கொடுத்து என்னை நடிகனாக அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் மகன் திருமணத்திற்கு நேரில் சென்று அவருக்கு அழைப்பிதழ் கொடுத்தேன். நான் சினிமாவில் நடிக்க தொடங்கியது முதல் இன்று வரை அவருடன் என்னுடைய நட்பும் உறவும் அதே பாசத்துடன் நீடித்தது. 3 மாதங்களுக்கு முன்பு என்னுடன் தொலைபேசியில் அவர் நீண்ட நேரம் பேசினார். இன்னும் 2 மாதங்களில் அவரை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள் இப்படி ஆகிவிட்டது என்று நடிகர் நெப்போலியன் அந்த வீடியோவில் வருத்தமாக பேசியிருக்கிறார்.





