தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த இயக்குனர்களில் ஒருவர் சேரன். இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக தொழில் கற்றவர். பாரதி கண்ணம்மா படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்தார். நல்ல சமூக கருத்துள்ள படங்களை தருவதில் சேரன் அதிக அக்கறை காட்டியவர்.
அந்த வகையில் வெற்றிக்கொடி கட்டு தவமாய் தவமிருந்து பொற்காலம் பொக்கிஷம் தேசிய கீதம் என அவரது படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இயக்குனர் சேரனுக்கு 2 முறை மத்திய அரசின் சிறந்த இயக்குனர் தேசிய விருதும் கிடைத்தது. பிரிவோம் சந்திப்போம் சொல்ல மறந்த கதை போன்ற படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
சேரன் இயக்கிய படங்களில் தவமாய் தவமிருந்து படம் தந்தையின் பெருமை பேசுகிற கதைக்களத்தில் உருவானது. 2 ஆண் பிள்ளைகளின் தந்தை அவர்களை காப்பாற்றவும் படிக்க வைக்கவும் குடும்பத்தை நடத்தவும் படுகிற கஷ்டங்கள் சிரமங்கள் துன்பங்களை திரையில் அப்படியே சேரன் கொண்டு வந்திருந்தார். தந்தை கேரக்டரில் ராஜ்கிரண் அசத்தியிருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் சேரன் கூறியதாவது, தவமாய் தவமிருந்து படத்தை 4 பேர் பார்த்தாங்க. பாலசந்தர் சார் பாரதிராஜா சார் மகேந்திரன் சார் பாலு மகேந்திரா சார் இவங்க 4 பேரும் ஒரே ஷோவில் பக்கத்து பக்கத்து சீட்டுல வரிசையா உட்கார்ந்து இந்த படத்தை ஒண்ணா பார்த்தாங்க. பிலிம் சேம்பர்ல நடந்த டெக்னிக்சீஷியன் ஷோ அது. 4 பேரும் ஒண்ணா உட்கார்ந்து படம் பார்க்கிறாங்க.
படம் முடிஞ்சு டெக்னீஷியன் எல்லாம் போயிட்டாங்க. இவங்க 4 பேரும் வெளியே வரணும். நான் அப்படியே வெளியே நின்னுக்கிட்டு இருக்கேன். 4 பேரும் கன்னத்தில் கையை வெச்சு அப்படியே யோசிச்சிக்கிட்டு உட்கார்ந்துட்டு இருக்காங்க. படம் முடிஞ்சிருச்சு. எந்திரிக்கலே. வெளியே வரலை. ஒரு சத்தம் கிடையாது. அப்படியே 4 பேரும் உட்கார்ந்துட்டு இருக்காங்க. அவங்க மௌனம் கலைக்க 10 நிமிஷம் ஆச்சு. 10 நிமிஷம் கழிச்சு பாரதிராஜா சார்தான் அந்த மௌனத்தை கலைக்கிறார்.
அவர் தொடையை வேகமா தட்டி, இப்படி ஒரு படம் பண்ணலையேடா நாம என்று சத்தமாக சொன்னார். அப்புறம் 4 பேருமே பெருமூச்சு விட்டு ரிலாக்ஸ் ஆனார்கள். பிறகு என்னை பார்த்து வாடா என பாரதிராஜா அழைத்தார். நான் போனதும் 4 பேரும் என்னை கட்டிப் பிடித்துக்கொண்டனர். அடுத்த 45 நிமிடம் அந்த படம் குறித்து அவர்கள் 4 பேரும் பேசிக்கொண்டே இருந்தனர் என்று இயக்குனர் சேரன் கூறியிருக்கிறார். அந்த 4 பேருமே இப்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.





