கடந்த 1994ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படம் வெளியான போதே அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்பது பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமாக இருந்தது. ஆனால் அவர் ஆண்டவன் விரும்பினால் நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தாரே தவிர அரசியலுக்கு வரவில்லை.
அந்த சமயத்தில் வாஜ்பாய் அத்வானி போன்ற தேசிய தலைவர்களும் மூப்பனார் சிதம்பரம் சோ போன்றவர்களும் ரஜினிக்கு ஆதரவு தர முன்வந்தும் ரஜினி அரசியலுக்கு வராமல் ஒதுங்கி விட்டார். சினிமா ஆன்மீகம் இந்த இரண்டு மட்டுமே எனக்கு முக்கியம் என்றும் அரசியல் எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் என்றும் மறுத்துவிட்டார்.
ஒரு கட்டத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் விரக்தியும் எழுந்த நிலையில் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று 2021ம் ஆண்டில் அறிவித்தார். அதன்பிறகு தனது உடல் நிலையை காரணம் காட்டியும் ரசிகர்களின் எதிர்கால நலம் கருதியும் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார்.
அதே நேரத்தில் அவர் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விமர்சனங்களும் உள்ளன. ரஜினிக்கு சினிமாவில் நடிக்க உடல் நலம் இருக்கிறது. அரசியலில் ஈடுபட உடல் நலம் இல்லையா என்றும் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் செய்தியாளர்கள் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் ஜெயித்திருப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, ரஜினிகாந்த் பெரிய தலைவர். 2021ல் அவர் அரசியலுக்கு வராதது மிகப்பெரிய மிஸ்சிங். நான் கொஞ்சம் மோசமாக ஃபீல் செய்தேன். அவர் வரவில்லை என்பதற்காக இல்லை. அவர் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது. ஏனெனில் அவருக்குள் பல திட்டங்கள் இருந்தன. நிறைய கனவுகள் இருந்தன. அதனால்தான் அவர் அரசியலுக்கு வரவில்லை.
ஆனால் கோவித் காலத்தில் அப்படி ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. எப்படி ஒரு நாடு இருக்க வேண்டும் என்பதை அவர் திட்டமிட்டு இருந்தார். லீ குவான் யூ செய்தது போல செய்ய வேண்டும் என்றும் நினைத்திருந்தார். அவரது விஷனை நான் நன்கு அறிவேன். தமிழகத்தில் ஒரு பெரிய தலைவரை நாம் மிஸ் செய்து விட்டோம் என்று அந்த நேர்காணலில் லதா ரஜினிகாந்த் தனது கணவர் குறித்து பேசியிருக்கிறார்.





