தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஒரு டிரெண்டு தொடங்கியிருக்கிறது. வெளிநாடுகளில் வெளிவரும் Slaugher வகையிலான திரைப்படங்களுக்கு இணையாக ரத்தம் தெறிக்க தெறிக்க பல ஆக்சன் திரைப்படங்கள் தமிழில் வெளிவருகின்றன. சமீபத்தில் வெளிவந்த “ஜெயிலர்” திரைப்படத்தில் கூட அதிக வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருந்தது விமர்சனத்திற்குள்ளானது.

அதே போல் விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்திலும் வன்முறை காட்சிகள் அதிகமாக இடம்பெறும் என கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் தற்போதுள்ள சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில் தங்கர் பச்சான் இயக்கிய “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் தங்கர் பச்சான் மேடையில் பேசியபோது தற்போதைய தமிழ் சினிமாவின் போக்கை மிகவும் கண்டித்துப் பேசினார்.

“பெரிய நடிகர்களின் படங்கள் 200 கோடி 300 கோடி என்று கூறுகிறார்கள். அந்த படத்தில் அப்படி என்ன இருக்கும். என்ன ஒரு 100 துப்பாக்கி வச்சிருப்பான், வெட்டிக் கொல்லுவான், குத்திக்கிட்டே இருப்பான், செத்துக்கிட்டே இருப்பான். இது போன்ற படத்தை குழந்தைகளுடன் வேறு சென்று பார்க்கிறோம். அந்த குழந்தைகள் என்ன நினைக்கும். உயிர்களின் மீது அவர்களின் மதிப்பீடு என்னவாக இருக்கும்.
ஒரு நாய் இறந்தால் கூட அய்யோ என்று பதறுகிறவர்கள்தான் மனிதர்கள். ஆனால் திரைப்படங்களில் கண்முன்னே 100 பேர் சாகிறார்கள். வெட்டுறான், குத்துறான், கொலை பண்ணுறான், இந்த படங்களை எல்லாம் பிள்ளைகள் பார்த்தால் அந்த பிள்ளைகள் என்னவாக வளரும்.
இது அந்த படத்திற்கு முதலீடு செய்பவருக்கு அறிவு இருக்காதா? நடிக்கிறவங்களுக்கு இந்த அறிவு இருக்காதா? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? பணம் வந்தா போதுமா உங்களுக்கு. தன்னை கலைஞன் என்று சொல்பவர்களுக்கு பொறுப்பு இருக்கிறது, கடமை இருக்கிறது” என்று மிகவும் கடுமையாக அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார் தங்கர் பச்சான்.





