நடிகர் விஜயகாந்த் நடிகராக மட்டுமின்றி நல்ல மனிதராக மக்கள் மனங்களில் அன்பு மரியாதை புகழை பெற்றவர். தமிழ் சினிமாவில் அவர் பங்களிப்பு மிக சிறப்பாக இருந்தது. மேலும் நடிகர் சங்கத் தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக அரசியல் களத்தில் தேமுதிக கட்சி தலைவராக அவர் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார். மக்களின் அமோக ஆதரவை பெற்றார்.
நடிகராக இருந்த காலகட்டத்தில் விஜயகாந்த் பல நடிகர்களுக்கு தன்னுடைய படங்களில் நடிக்க வாய்ப்பளித்தார். பலருக்கு பொருளாதார ரீதியான உதவிகளை செய்தார். புதுமுக இயக்குனர்களின் படங்களில் அவரே நடித்தார். தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் புதுமுக இயக்குனர்கள் படங்களை இயக்கவும் வாய்ப்பு கொடுத்தார்.
எஸ்ஏ சந்திரசேகர் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவுக்குள் வந்த விஜய்க்கு ரசிகர்களிடம் போதிய கவனமும் அங்கீகாரமும் ஆரம்பத்தில் கிடைக்கவில்லை. அதனால் எஸ்ஏசி வேண்டுகோளை ஏற்று செந்தூரப்பாண்டி என்ற படத்தில் தனது தம்பியாக விஜயை நடிக்க வைத்தார். அந்த படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக்கொடுத்தவர் கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இப்போது விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நிலையில், விஜயகாந்த் மகனை கண்டுகொள்ளவில்லை என்று சீனியர் நடிகை அம்பிகா விமர்சனம் செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் 1980களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் அம்பிகா. ரஜினி கமல் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர் அம்பிகா. இப்போதும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை அம்பிகா கூறியதாவது, விஜயகாந்த் இறந்ததுக்கு அப்புறம் அவரோட பையன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடிச்சிட்டு இருக்கிறார். ஆரம்பத்துல விஜயகாந்த் விஜய்க்கு சினிமாவில் எவ்வளவோ உதவிகள் பண்ணினார். இப்போ வார்த்தைக்கு வார்த்தை விஜயகாந்த் என்னோடு அண்ணன்னு பேசுற விஜய் அவர் பையன் சண்முக பாண்டியனுக்கு என்ன பண்ணினார்?
என்னோட படத்துல நீ ஒரு கேரக்டர் பண்ணு, இல்லேன்னா உன்னோட படத்துல நான் ஒரு பாட்டு இல்லன்னா ஒரு பைட் பண்றேன் என்று சொன்னாரா? என்னோட அண்ணன் விஜயகாந்துக்கு பண்றேன்னு ஏன் முன்வந்து செய்யலே? இப்ப மட்டும் என்ன திடீர்னு பாசம் பொத்துக்கிட்டு வருது? அப்போ விஜய்யும் மத்த அரசியல் மாதிரி நாடகம் செய்கிறார். காரியம் ஆக மட்டும் விஜயகாந்த் தேவைப்படுகிறார். அதுவும் இப்போதான் விஜய்க்கு தேவைப்படுகிறார் என்று நடிகை அம்பிகா ஆவேசமாக அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.





