விஜய் நடித்த லியோ படம், நிச்சயமாக அதிகாலை 4 மணிக்கு திரையிட வாய்ப்பில்லை என்பதை, சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி விட்டது. 9 மணிக்கு முதல் காட்சியை திரையிட அனுமதித்துள்ள நிலையில், அதற்கு மாற்றாக, காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை தயாரிப்பாளர் தரப்பில் எழுந்துள்ளது.
ஆனால், காலை 9 மணிக்கு பதிலாக, காலை 7 மணிக்கு சிறப்பு காட்சியை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்ற தயாரிப்பாளர் தரப்பு கோரிக்கைக்கு, அதை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அந்த கோரிக்கையை தமிழக அரசுவிடம் வையுங்கள். அதுகுறித்து நாளை மதியத்துக்குள் அரசு அறிவிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் வேறு ஒரு புதிய தகவலையும் அரசு தரப்பில் தெளிவுப்படுத்தியுள்ளது. அதாவது, லியோ படம் இரண்டே முக்கால் மணி நேரம் என்றால், நாங்கள் நான்கு காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி தந்திருப்போம். இப்படி 5 காட்சி தர வேண்டிய அவசியமே இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிக்கு ஏன் தயாரிப்பாளர் தரப்பில், இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது. படம் ரிலீஸானால், தொடர்ந்து வரும் நாட்களில் அடுத்தடுத்த காட்சிகளை ரசிகர்கள் பார்க்கத்தானே போகிறார்கள் என்ற நிலையில், இதுகுறித்து புதிய கோணத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, வரும் 19ம் தேதி லியோ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு ரசிகர் சிறப்பு காட்சி நடத்திக் கொள்ள, அந்தந்த மாநில அரசு தரப்பில் அனுமதி கிடைத்துள்ளது. அதனால், அங்குள்ள ரசிகர்கள் முதல் ஆளாய் படத்தை பார்த்து, படம் குறித்த தங்களது விமர்சனங்களை தெரியப்படுத்தி விடுவர்.
தியேட்டருக்குள் இருந்தபடியே, படம் குறித்த தகவல்களை உடனுக்குடன் ஷேர் செய்து, படம் குறித்த சுவாரசியங்களை கெடுத்துவிடுவர். அது தமிழகத்தில் தியேட்டர்களின் வசூலை பாதிக்கச் செய்யலாம். தமிழகத்தில் விஜய் ரசிகர்கள் எனில், படம் ஓரளவு நன்றாக இருந்தால் கூட சூப்பர் சூப்பர் என, முதல் நாளிலேயே அதிக அலப்பரை கௌப்பி, படம் மீதான ஒரு பெரிய இமேஜை ஏற்படுத்தி விடுவர். இதன் காரணமாக தான், 4 மணிக்கு காட்சிக்கு முட்டி மோதி, அது இல்லை என்று ஆன நிலையில், இப்போது 7 மணி சிறப்பு காட்சிக்காக, தயாரிப்பாளர் தரப்பில் போராடி வருகின்றனர்.





