தமிழக சட்டசபையில் நிறைவு நாளான இன்று முதல்வர் விஜய் ஆளுநர் உரை குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசினார். அப்போது திமுக குறித்தும் கடந்த கால திமுக ஆட்சி குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை விஜய் அடுக்கினார். அதனால் ஆவேசம் அடைந்த திமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய், ஒரு குட்டி கதை சொல்லட்டுமா என்று சபாநாயகரிடம் அனுமதி கேட்டு பிறகு பேசினார். ஒரு ஊரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது என்பதால் பெரியவர் ஒருவர் கண்கள் மீது கையை வைத்து மறைத்தபடி சுற்றும் மற்றும் பார்த்து தேடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு சிறுவன் என்ன தேடுகிறீர்கள் என்று கேட்டான்.
அதற்கு ஒன்றுமில்லை தம்பி. உங்க அப்பா இங்கே தான் இருப்பார் என்று சொன்னார்கள். அவரை தான் தேடிக் கொண்டிருக்கிறேன். எங்கே உங்க அப்பாவை காணோம்? அவரை தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னாராம் என்று மறைமுகமாக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இல்லை என்பதை கேலி செய்யும் விதமாக விஜய் அந்த குட்டி கதையை சொல்லி பேசினார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது, சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதில் உரை என்ற பெயரில் ஸ்கிரிப்டேடு அவதூறுகளை அள்ளி வீசி ஆக்டிங் பெர்ஃபார்மன்ஸ் காட்டி இருக்கிறார் முதல்வர்.
பேரவையின் லைவ் கேமராவை சினிமா கேமரா என நினைத்துக் கொண்டு அவர் பேச அதை எதிர்க்கட்சிகள் குறுக்கீடுகள் இன்றி சிங்கிள் டேக்கில் சூட் செய்ய வேண்டும் என்று பேரவை தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல. முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் பஞ்ச் டயலாக் மட்டும் தான் இருந்ததே தவிர மின்வெட்டு விவசாயிகள் பிரச்சனை மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுக்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்தது கண்டிக்கத்தக்கது. குட்டி கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். எனவே நடிகர் விஜய் என்பதை மறந்து இனியாவது தமிழக முதலமைச்சராக அவர் நடந்து கொள்ள வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடியாக பதிவிட்டுள்ளார்.





