தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் விஜய், இப்போது தவெக தலைவராகவும் தமிழக முதல்வராகவும் இருந்து வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்து 2 மாதங்கள் கடந்த நிலையில் தொடர்ந்து அவரது ஆட்சி குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்து வருகின்றன. எனினும் அவருக்கு ஆதரவும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
நடிகர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் படம் 6 மாதங்களாக சென்சார் பிரச்னை காரணமாக திரைக்கு வராமல் முடங்கி இருந்தது. இப்போது அந்த படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் வருகிற 23ம் தேதி ஜனநாயகன் படம் திரைக்கு வர உள்ளது. முதலில் 24ம் தேதி என்று கூறிய நிலையில் ஒரு நாள் முன்னதாக படம் திரைக்கு வருகிறது.
நடிகராக இருந்த விஜய் முதல்வராக பதவியேற்றது முதல் தமிழ் சினிமா துறை சார்ந்த இயக்குனர்கள் நடிகர்கள் நடிகைகள் தயாரிப்பாளர்கள் என பலரும் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.
இதற்கிடையே தமிழ் திரைப்பட துறை சார்பில் முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா நடத்த பலரும் ஆர்வமாக உள்ளனர். இதற்காக சில இயக்குனர்கள் சில தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து விஜய் தரப்பில் பேசப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அங்கிருந்து சரியான சிக்னல் கிடைக்கவில்லை. இதுகுறித்து விஜய் நடித்த சிவகாசி திருப்பாச்சி படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் பேரரசு கூறியதாவது, முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா நடத்த முதலில் கோரிக்கை வைத்தது இயக்குனர்கள் தான். விஜய்க்கு பாராட்டு விழா நடத்த முதலில் கோரிக்கையை வைத்தது இயக்குனர்கள் தான். இயக்குனர் இல்லாமல் ஒரு ஹீரோ பெரிய ஆளாக வளர்ந்து விட முடியாது.
இயக்குனரின் கற்பனையால் தான் எம்ஜிஆர் ரஜினி விஜய் போன்ற ஹீரோக்கள் உருவானார்கள். முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா நடத்த நாங்கள் ஆர்வமாக இருந்தாலும் விஜய் தரப்பில் ஆர்வமாக இருப்பதாக தெரியவில்லை. இதுபற்றி பேசவே தயக்கமாக இருக்கிறது என்று இயக்குனர் பேரரசு வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





