தமிழ் சினிமாவில் கடந்த 1980, 90களில் மிகவும் கவனிக்கப்பட்ட முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் ராம்கி. ராமகிருஷ்ணன் என்ற முழுப் பெயரை சுருக்கி, சினிமாவுக்காக ராம்கி என வைத்துக்கொண்டார். ராம்கி நடித்த செந்தூரப்பூவே, இணைந்த கைகள் படங்கள் அந்த காலகட்டத்தில் சூப்பர் ஹிட் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
செந்தூரப்பூவே படத்தில் நடித்த போது, ஜோடியாக நடித்த நடிகை நிரோஷாவுக்கும், ராம்கிக்கும் காதல் ஏற்பட்டு பிறகு திருமணம் செய்துக்கொண்டனர். நடிகை நிரோஷா, நடிகை ராதிகாவின் சொந்த சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தில் நிரோஷா நடித்திருந்தார்.
நடிகர் ராம்கி நடித்த பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. பெண்புத்தி பின்புத்தி, சின்னப்பூவே மெல்லப் பேசு, மருதுபாண்டி, கருப்பு ரோஜா, விஸ்வநாதன் ராமமூர்த்தி, இரண்டில் ஒன்று, குற்றப் பத்திரிகை, வெள்ளயைத்தேவன், இரட்டை ரோஜா, எனக்கொரு மகன் பிறப்பான், வனஜா கிரிஜா என பல படங்கள் அவரது நடிப்பில் வெளிவந்துள்ளன.
துவக்கத்தில் நிறைய படங்களில் நடித்த ராம்கி, பிறகு சில ஆண்டுகளுக்கு ஓரிரு படங்களில் மட்டுமே நடித்தார். பல ஆண்டுகள் நடிப்பில் இடைவெளியும் விட்டார். ஆனால் அவ்வப்போது படங்களில் நடித்து தன் ரசிகர்களை நினைவுபடுத்தி வந்தார். தற்போது லக்கி பாஸ்கர் படத்தில், நாயகன் துல்கர் சல்மானுக்கு உதவும் ஆண்டனி கேரக்டரில் ராம்கி நடிப்பு வெகுவாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ராம்கி கூறியதாவது, எங்க வீட்டில் யாருக்கும் எந்த கொட்ட பழக்கமும் கிடையாது. சிகரட் பிடிச்சாலே பெரிய தப்புன்னு நினைக்கிற குடும்பம். எல்லாரும் நல்லா படிச்சாங்க. ஆனா எனக்கு படிப்பு வரவில்லை. அதனால் நான் உருப்பட மாட்டேன்னு எங்க அப்பா எனக்கு தண்ணீ தெளிச்சு விட்டுட்டாரு. அப்புறம் 7 வருஷமா நான் வீட்டுக்கே போகலே.
அதுக்கு அப்பறம் நான் சினிமாவுல போராடி ஜெயிச்சேன். நான் நடிச்ச படம் பெரிய ஹிட் ஆயிடுச்சு. ஊர்ல நான் நடிச்ச படத்தை பார்த்துட்டு எங்க அப்பா, சந்தோஷப்பட்டார். நான்தான் அப்பான்னு என் புள்ள என்னை சொல்ல வெச்சுட்டான் அப்படீன்னு எல்லார்கிட்டேயும் பெருமையா சொன்னார், என்று அந்த நேர்காணலில் ராம்கி தன் கடந்தகால நினைவுகளை பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.





