தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த விஜய் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கினார். அப்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம் என்ற படத்தில் நடித்து வந்த அவர் இன்னும் ஒரு படத்தில் நடிப்பேன். அதுதான் என்னுடைய கடைசி படம் என்றும் அறிவித்தார்.
அதுதான் அவரது 69வது படமாக இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் இன்று ஜனநாயகன் திரைப்படம் திரைக்கு வந்தது. சென்சார் பிரச்னை காரணமாக கடந்த 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த படம் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு இன்று உலகம் முழுவதும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
நடிகராக இருந்த விஜய் அரசியல்வாதியாக மாறிய பிறகு தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பலவிதமான விமர்சனங்களையும் சந்தித்தார். குறிப்பாக மேடைகளில் திமுக தலைவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசுகையில் அங்கிள் என்று கூறியது, கரூரில் 41 பேர் நெரிசலில் சிக்கிய உயிரிழந்த சம்பவம், அப்போது சென்னைக்கு அவர் ஓடி வந்த நிகழ்வு ஆகியவை கடும் விமர்சனத்தில் அவரை சிக்க வைத்தது.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களை பனையூருக்கு நேரில் வரவழைத்து ஆறுதல் சொன்னது, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு சமீபத்தில் அரசு வேலை வழங்கியது, தமிழக முதல்வரான பிறகும் வாயில் நல்லா வந்துடும் என்று பொதுவெளியில் பேசியது, அவரது மனைவி சங்கீதா விவகாரத்து வழக்கு தொடர்ந்தது, நடிகை திரிஷாவுடன் விஜயின் நட்பு என பல விவகாரங்களில் அவர் மீது சர்ச்சைகள் நீடித்து வருகிறது.
இன்று ஜனநாயகன் படம் ரிலீஸான சூழலில், நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் மாணவர்கள் மீது பலத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறை அடக்குமுறை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பிரச்னை காரணமாக நடிகர் சூர்யா இன்று தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று அறிவித்து விட்டார்.
ஆனால் ஜனநாயகத்தை காப்பாற்ற மாணவர் சமுதாயத்தில் நீட் தேர்வை எதிர்த்து போராடி வரும் ஒரு மோசமான சூழலில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை தவெக அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் அவரது ரசிகர்களும் பார்த்து கொண்டாடி வருவது பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதான் மாணவர்கள் மீது முதல்வர் விஜய் காட்டும் கரிசனமா, அக்கறையா என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.





