ஒரு திரைப்படம் சிறப்பாக கதையோட்டத்துடன் பின்னி பிணைந்து சுவாரசியமாக செல்வதற்கு முக்கிய காரணம் அந்த படத்தில் வரும் கேரக்டர்கள் பேசும் வசனங்கள்தான். காட்சிகளுடன் வசனங்களும் கதையை புரிய வைத்து அடுத்தடுத்த கட்டத்துக்கு ரசிகர்களை நகர வைக்கின்றன. காட்சிகளும் வசனங்களும்தான் ஒரு படத்தின் வெற்றிக்கு அச்சாணியாக இருக்கின்றன.
இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் கே பாக்யராஜ் கூறியதாவது, படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குனர்கள் சொல்கிற சின்ன விஷயங்கள் கூட எனக்கு நல்லா ஞாபகம் இருக்கும். சின்ன வீடு படத்துல கல்பனாவை நான் திட்டுவேன். நீ குண்டா இருந்துட்டு பர்சனாலிட்டியை இருக்கிற என்னை கல்யாணம் பண்ணிட்டேன்னு பேசுவேன். அப்போ கல்பனா பேசற ஒரு டயலாக் ரொம்ப நல்லா சென்டிமென்டா இருக்கணும்ன்னு ஆசைப்பட்டேன்.
அப்போ அசிஸ்டென்ட் பார்த்திபன் ஒரு டயலாக் சொன்னாப்ல. மாமா உங்க தோள்ல போடற துண்டு மாதிரி நான் கௌரவமா இல்லாட்டியும் காலில் மாட்டற செருப்பு மாதிரி உபயோகமா இருப்பேன் மாமான்னு சொல்ற டயலாக் அது. ரொம்ப நல்லா இருக்குய்யா, பளிச்சின்னு இருக்குன்னு சொல்லி கை கொடுத்து அவரை பாராட்டினேன்.
அதே மாதிரி ரவிசங்கர்ன்னு ஒரு அசிஸ்டென்ட் என்கூட இருந்தார். பவுனு பவுனுதான் படத்துல ஒரு முக்கியமான கட்டம். பவுனு வாயை அடைக்கிற மாதிரி ஒரு டயலாக் சொல்லணும். அதை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன். அப்போ அந்த ரவிசங்கர் சொன்ன டயலாக், பவுனு நீ தண்ணீயில முகம் பார்த்து பொட்டு வைக்கலாம். தப்பில்லே.
ஆனா தண்ணீயில தெரியற முகத்துக்கு நீ பொட்டு வைக்க ஆசைப்படறியேம்மா. இது நடக்கக்கூடிய காரியமான்னு அந்த டயலாக் சொன்னார். இதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இப்படி அசிஸ்டென்ட் டைரக்டர்கள் எல்லாம் இந்த மாதிரி என்கிட்ட சொல்லும் போது அதை நான் ஏத்துக்கிட்டு அவங்களை மனசார பாராட்டுவேன்.
அப்படி தான் அவர்களை நான் ஊக்கப்படுத்துவேன். இப்படி அவங்க சொல்றதை நான் ஏத்துக்கிட்டு பாராட்டும் போது, அந்த அளவுக்கு நம்ம சிந்தனை திறன் நல்லா இருக்குதுன்னு அவங்களும் அதை புரிஞ்சுப்பாங்க என்று அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே பாக்யராஜ் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





