மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கைதி விக்ரம் மாஸ்டர் லியோ கூலி ஆகிய படங்களை தந்தார். இப்போது அவர் முதன்முறையாக அவர் டிசி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை சாணிக்காயிதம் கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் டைரக்ட் செய்திருக்கிறார்.
நாளை 7ம் தேதி டிசி படம் ரிலீஸாக வேண்டிய சூழலில் இப்போது அந்த படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள டிசி படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம்தான் வெளியிட உள்ளது.இந்த படத்தை தியேட்டர்களில் வெளியீடு செய்ய குறைந்த பட்சம் ஷேர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது தியேட்டர்களுக்கு பர்சன்டேஜ் அளவை குறைத்து தருவதாக தெரிய வந்துள்ளது.
இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் சேலம் மல்டிபிள் தியேட்டர் சங்கம் சார்பில் சேலம் மாவட்டத்தில் டிசி படத்தை எந்த ஒரு தியேட்டரிலும் ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று வெளிப்படையாக தியேட்டர்கள் உரிமையாளர்கள் தெரிவித்துவிட்டனர். சேலத்தை போலவே மற்ற சில மாவட்டங்களிலும் டிசி படம் ரிலீஸ் இல்லை என்றும் கூறப்படுகிறது.
அதே போல் மதுரையில் சினிமா தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியனுக்கு சொந்தமான சில தியேட்டர்கள் தவிர பெரும்பாலான தியேட்டர்களில் மதுரையில் இந்த படம் ரிலீஸ் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதனால் டிசி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக ரெட் ஜெயின்ட் மூவீஸ் இதுபோன்று பர்சன்டேஜ் குறைக்கும் போது திமுக ஆட்சி காலத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை. இப்போது ஆட்சி மாற்றம் நடந்துள்ளதால் இப்படி எதிர்த்து போர்க்கொடி தூக்கியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
அதே நேரத்தில் மற்றொரு வாய்ப்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்துக்கும் இதில் சாதகமாக உள்ளது. அதாவது ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் அவர்கள் வசம் உள்ளது. அதனால் டிசி படத்தை வெளியிட்டால்தான் ஜெயிலர் 2 படத்தை எல்லா தியேட்டர்களுக்கும் தருவோம் என்ற நெருக்கடி தரும் பட்சத்தில் அனைவருமே டிசி படத்தை தங்களது தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவும் வாய்ப்பு உள்ளது.





