- Advertisement -
Homeபொழுதுபோக்குகடவுள் முருகனுக்கு 6 தலையாச்சே? அவர் எப்படி படுத்து தூங்குவார்? - கிண்டலாக கேட்ட நடிகவேள்...

கடவுள் முருகனுக்கு 6 தலையாச்சே? அவர் எப்படி படுத்து தூங்குவார்? – கிண்டலாக கேட்ட நடிகவேள் எம்ஆர் ராதாவுக்கு வாரியார் சுவாமிகள் தந்த நச் பதில்!

- Advertisement -

தமிழகத்தின் சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளராக இருந்தவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். முருகப் பெருமானின் பெருமைகளை எளிமையாகவும், நகைச்சுவையுடனும், ஆழ்ந்த தத்துவத்துடனும் மக்களிடம் பேசியவர். அதேபோல் தமிழ் நாடகங்கள் மற்றும் சினிமா உலகில் தனது தனித்துவமான நடிப்பு நகைச்சுவை கேள்வி கேட்கும் துணிவால் புகழ்பெற்றவர் நடிகவேள் எம்ஆர் ராதா.

ஒருமுறை திருமண விழா ஒன்றில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் நடிகர் எம்ஆர் ராதாவும் கலந்துகொண்டனர். திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த பலரும் வாரியார் சுவாமிகளிடம் ஆன்மிக உரையாடலில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த எம்ஆர் ராதா, வாரியாரிடம் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்.

- Advertisement -

முருகனுக்கு ஆறு தலைன்னு சொல்றீங்களே? இரவில் அவர் எப்படி ஒரு பக்கமாக படுத்து தூங்குவார்? என்று வில்லங்கமாகவும் அதே நேரத்தில் விவகாரமாகவும் அப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அந்தக் கேள்வியை அவர் கேட்டவுடன் திருமண மண்டபத்தில் இருந்த பலரும் சிரித்து விட்டனர்.மேலும் வாரியார் என்ன சொல்லப் போகிறார் என்று எல்லோரும் அவரையே கவனித்தனர்.

இந்த கேள்விக்கு வாரியார் சுவாமிகள் உடனே பதில் சொல்லவில்லை. அவர் அமைதியாக திருமண மண்டபத்தில் இருந்த மணமகளின் தந்தையை அழைத்தார். மிகவும் அன்பாக அவரிடம் ஒரு கேள்வி கேட்டார். நேற்று இரவு நன்றாகத் தூங்கினீர்களா? என்று அவரிடம் கேட்டார்.

- Advertisement -

அதற்கு மணமகளின் தந்தை மிகுந்த உணர்ச்சிவசத்துடன், சுவாமி… இன்று என் மகளின் திருமணம். எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற கவலையிலேயே இருந்தேன். அதனால் நேற்று இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை என்று பதிலளித்தார். அந்தப் பதிலைக் கேட்ட வாரியார் சுவாமிகள் அங்கு இருந்த அனைவரையும் நோக்கி அமைதியாகச் சொன்னார்.

ஒரே ஒரு மகளின் திருமணம் நன்றாக நடக்க வேண்டும் என்று நினைக்கும் இந்தத் தந்தைக்கே இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. அப்படியிருக்க, உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தனது பிள்ளைகளாகக் கருதி அருள் புரியும் முருகப்பெருமானுக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்கு ஓய்வெடுக்க நேரம் எங்கே? என்று வாரியார் கூறியதாக இந்தச் சம்பவம் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் இது எங்கே எப்போது நடந்தது என்று யாரும் உறுதிப்படுத்தவில்லை.

- Advertisement -

சற்று முன்