தமிழ் சினிமாவில் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு அதிரடியான கவர்ச்சி நடிப்பால் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷகிலா. கடந்த 1990களில் ஷகிலா நடித்த தமிழ் மற்றும் மலையாள படங்கள் பெரிய அளவில் வசூலை அள்ளியது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்கள் படங்களின் வசூலை கூட ஷகிலாவின் படங்கள் கடுமையாக பாதித்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
அந்த அளவுக்கு கவர்ச்சியால் ரசிகர்களை திணறடித்தவர் ஷகிலா என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஷகிலாவுக்கு சமீபத்தில் கழுத்து நரம்பு கடும் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. சிகிச்சை முடிந்த நிலையில் அவர் வீடு திரும்பி இருக்கிறார். கழுத்துப் பட்டையுடன் அவர் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து நடிகை ஷகிலா கூறியதாவது, படுக்கையில் பல மணி நேரம் ஒருபுறமாக சாய்ந்து கொண்டு இடைவிடாமல் சுமார் 4 மணி நேரம் வரை எனது மொபைல் போனில் கேம்ஸ் விளையாடுவதும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ரீல்ஸ்களை பார்ப்பதையும் பல ஆண்டுகளாக வழக்கமாக கொண்டிருந்தேன்.
இந்த தொடர்ச்சியான தவறான உடல் அசைவு மற்றும் அதிகப்படியான செல்போன் பயன்பாடு காரணமாக எனது கழுத்து பகுதியில் இருந்த முக்கிய ரத்த நாளங்களும் நரம்புகளும் கடுமையாக பாதிப்படைந்தன இதனால் வலி ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அங்கு கழுத்தில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இந்த சிகிச்சைக்காக சுமார் 3 லட்சம் ரூபாய் வரை செலவானது என்று ஷகிலா கூறியிருக்கிறார்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய நடிகை ஷகிலா டாக்டர்களின் கடுமையான அறிவுறுத்தலின்படி கழுத்து பட்டை அணிந்து முழுமையாக ஓய்வெடுத்து வருகிறார். எழுந்து நிற்பது நடப்பது சாப்பிடுவது உள்ளிட்ட தினசரி சாதாரண செயல்களுக்கு கூட மற்றவர்களின் உதவி தேவைப்படும் நிலையில் அவர் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது ரசிகர்களுக்கு கூறியிருப்பதாவது, செல்போன் என்பது மிக அவசியமான மற்றும் பயனுள்ள ஒரு பொருள் தான். ஆனால் அதை அதிகமாக பயன்படுத்தி நேரத்தை வீணடிக்காதீர்கள். மேலும் அளவுக்கு மீறி போனை பயன்படுத்துவது பெரும் பணம் இழப்பையும் கடுமையான உடல் வேதனையை மட்டுமே தரும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தேவையற்ற முறையில் மொபைல் போன்கள் வாங்கித் தருவதை தவிர்க்க வேண்டும் என்று ஷகிலா கூறியிருக்கிறார்.





