கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் நட்சத்திர கனவு கன்னிகளாக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்தவர்கள் சகோதரிகள், நடிகைகள் அம்பிகா ராதா. அன்றைய காலகட்டத்தில் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சத்யராஜ் கார்த்திக் பிரபு என டாப் ஹீரோ நடிகர்களின் படங்களில் இவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய நடிகை ராதா தனது கணவருடன் இணைந்து ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு பிசினஸ்களில் ஆர்வம் காட்டினார். நடிகை அம்பிகா அவ்வப்போது படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தனது அக்கா அம்பிகா மற்றும் தனது சகோதரர் மல்லிகார்ஜூனா குஞ்சன் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதா மோசடி புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை ராதா அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, சென்னை போளூரில் ஏஆர்எஸ் கார்டன் என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறேன். தொழில் காரணங்களுக்காக அடிக்கடி வெளியூர் செல்லும்போது அவசர பயன்பாட்டுக்காக கையெழுத்திட்ட சில சொக்குகளை எனது அறையில் வைத்திருப்பது வழக்கம்.
கடந்த 2025ம் ஆண்டில் ஏஆர்எஸ் கார்டன் ஆர்ஆர் கார்டன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இதுபற்றி நான் நடத்தி வரும் தொழில் தொடர்பான ஐடிபிஐ வங்கிக்கும் உரிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதிய செக் புக்கும் எனக்கு தரப்பட்டது. இதனால் பழைய செக் புக் பயன்பாட்டில் இல்லாமல் போனது. கடந்த செப்டம்பர் 17ம் தேதி எனக்கு வங்கியிலிருந்து இ மெயில் வந்தது.
அதில் பயன்பாட்டில் இல்லாத எனது பழைய 5 செக்குகள் சுமார் 46 கோடி ரூபாய் அளவுக்கு அக்கா அம்பிகா பெயரில் பணமாக்க வங்கியில் செலுத்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக அந்த பண பரிமாற்றத்தை நிறுத்த சொல்லி விட்டேன். இதுபற்றி விசாரித்த போது அந்த செக்குகளை பூர்த்தி செய்தது எனது சகோதரர் மல்லிகார்ஜூனா குஞ்சன் என்பது தெரிய வந்தது. ஏற்கனவே அவர் மீது பெமா வழக்கு நிலுவையில் உள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள எனது வீட்டின் தரைத்தளத்தில் அக்கா அம்பிகா உள்ளார். நான் இல்லாத நேரத்தில் மேல் தளத்தில் உள்ள எனது வீட்டுக்கு சென்று செக்கை திருடி பண மோசடியில் ஈடுபட இருவரும் முயற்சித்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ராதா அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார். கடந்த 80களில் சகோதரி நடிகைகளாக தமிழ் சினிமாவை கலக்கியவர்கள். அக்கா அம்பிகா மீது அவரது தங்கை ராதா இப்படி ஒரு மோசடி புகார் அளித்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





